Published:Updated:

கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்? #DoubtOfCommonMan

ஒரு வழக்கில் கைதாகியுள்ள நபர் வெளியில் இருந்தால் அவரால் சாட்சிகளை எளிதில் உடைக்க முடியும், வழக்கு விசாரணையில் இருந்து தலைமறைவாகவும் முடியும்.

Published:Updated:

கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்? #DoubtOfCommonMan

ஒரு வழக்கில் கைதாகியுள்ள நபர் வெளியில் இருந்தால் அவரால் சாட்சிகளை எளிதில் உடைக்க முடியும், வழக்கு விசாரணையில் இருந்து தலைமறைவாகவும் முடியும்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "பெரும்பாலான வழக்குகளில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது நீதிபதி 15 நாள் காவலுக்கு உத்தரவிடுகிறாரே, அது ஏன்? குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தின் விசாரணையில் நிரபராதி என்று தீர்ப்பு வந்தால் அந்த வழக்கை பதிவுசெய்த காவல்துறை அதிகாரி மீது சட்டரீதியான நடவடிக்கை பாயுமா?" என்று கேட்டிருந்தார் வாசகர் கார்த்திகேயன் தினகரன். வாசகரின் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
Doubt of a common man
Doubt of a common man

வாசகரின் கேள்விக்கு விடை காண சென்னை உயர்நீதி மன்றத்தின் குற்றவியல் வழக்கறிஞர் சரவணவேலிடம் பேசினோம்.

"தற்போது நம்முடைய நீதித்துறையில் CRPC (Criminal Procedure Code) எனக்கூடிய குற்றவியல் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதன் அடைப்படையில்தான் நீதிமன்றங்களில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

CRPC பிரிவு 167/2-ன் படி காவல்துறை குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அந்த வழக்கை விசாரித்து, மேற்கொண்டு விசாரணை தேவை இருப்பின் 15 நாள் காவலுக்கு உத்தரவிடுவார். இந்த 15 நாள் காவல் என்பது ஒரு வழக்கை விசாரிக்கத் தேவைப்படும் கால அவகாசம்.

ஒரு வழக்கில் கைதாகியுள்ள நபர் வெளியில் இருந்தால் அவரால் சாட்சிகளை எளிதில் உடைக்க முடியும். வழக்கு விசாரணையில் இருந்து தலைமறைவாகவும் முடியும். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்க இந்த 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்படுகிறது. சிறு குற்றங்களுக்கு இந்த 15 நாள் காவலின் தேவை இருக்காது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சமீபமாக சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 41 (A) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பிரிவின்படி எல்லா குற்றங்களுக்கும் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. புகாரின் தன்மையைப் பொறுத்து சம்பந்தப்பட்ட நபரை காவல்துறை விசாரணைக்கு அழைத்து முறைப்படி சம்மன் அனுப்பலாம். சம்மன் அனுப்பியும் ஒத்துழைக்காத பட்சத்தில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எனவே, முன்புபோல் எதற்கெடுத்தாலும் உடனடி கைது என்பது இந்தப் புதிய பிரிவின் மூலம் தற்போது சிறிது தளர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக, ஜாமீன் வழங்கும் முறை, பிணையில் விடக்கூடியது மற்றும் பிணையில் விட முடியாதது என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் என்பது காவல்நிலையத்திலும் வழங்கப்படலாம். நீதிமன்றத்திலும் வழங்கப்படலாம். சிறிய குற்றங்களுக்கு காவல் நிலையத்திலேயே சம்பந்தப்பட்ட நபருக்கு எளிதில் ஜாமீன் கிடைத்துவிடும். அப்படி காவல்நிலையத்தில் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்லும்போது அங்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்படும். அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆனால், குற்றத்தின் தீவிரம் அதிகமாக இருப்பின் உடனடியாகக் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கப்பட மாட்டாது. பெரும்பாலும் 3 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள குற்றங்களுக்கு நீதிமன்றத்தில் எளிதில் ஜாமீன் கிடைத்துவிடும். ஆனால் கொலை, கற்பழிப்பு, தேசத் துரோக செயல்கள் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது சிரமமான ஒன்று. காவல்துறையால் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தின் விசாரணையில் குற்றமற்றவர் என்று நிருபணமாக வேண்டும்.

சமீபமாக சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 41 (A) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவின்படி எல்லா குற்றங்களுக்கும் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
வழக்கறிஞர் சரவணவேல்

குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தின் விசாரணையில் நிரபராதி என்று தீர்ப்பு வந்தால் அந்த வழக்கை பதிவுசெய்த காவல்துறை அதிகாரி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா?

குற்றம் சாட்டப்பட்ட நபர் வழக்கிலிருந்து முழுமையாக (clear) விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்பிறகு நீதிமன்றத்திலோ, மனித உரிமை ஆணையத்திலோ தன் மீது காழ்புணர்ச்சியின் காரணமாக பொய்குற்றம் சுமத்திய சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது புகார் பதிவு செய்ய முடியும்.

அப்படி வழக்கிலிருந்து முழுமையான விடுதலை அடைந்த நபர் நீதிமன்றத்திலோ மனித உரிமை ஆணையத்திலோ பதிவு செய்யும் புகார் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நீதிபதிகள் புகார் மனுவை விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுவர். அதேபோல் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்கவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவர்" என்றார்.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்யவும்.

Doubt of a common man
Doubt of a common man