Published:Updated:

குமரி: வெளிமாவட்ட போலீஸாரை நியமிக்க கோரிய வழக்கு... உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி பதிலளிக்க உத்தரவு!

உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை
உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை

குமரியிலுள்ள சட்டம், ஒழுங்கு போலீஸாரில் 90% பேர் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், விசாரிப்பவர்களுக்குப் பெரும்பாலும் உறவினர்கள், நண்பர்களாக இருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கில், ``கன்னியாகுமரி மாவட்டம் பதட்டம் மிகுந்த பகுதியாக இருக்கிறது. மண்டைக்காடு கலவரத்தில் ஆறு பேர் இறந்திருக்கிறார்கள். மேலும், அவற்றில் பலரும் காயமடைந்தனர். அதேபோல் தேங்காப்பட்டினம் பகுதியில் இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Madurai HC bench
Madurai HC bench

இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷனில், `கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சட்டம், ஒழுங்கு பராமரிக்கும் போலீஸாரில் 90 சதவிகிதம் பேர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இங்குள்ள குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் வழக்குகள் குறித்து விசாரித்துவருபவர்களுக்கு பெரும்பாலும் உறவினர்கள், நண்பர்களாக இருக்கிறார்கள்.

இதனால் இங்கு சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க சிரமம் ஏற்படுகிறது’ என கடந்த 2000-ம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி முருகேசன் அவரது உத்தரவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இதுவரை உள்ளூர் போலீஸார் அதிக அளவில் இருக்கிறார்கள். இதனால் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் நிலையில் இருப்பதுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அவலம் நிலவுகிறது. எனவே, இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய வெளியூர் போலீஸாரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நியமிக்க வேண்டும்’ என மனுவில் தெரிவித்திருந்தார்.

 கலவரம்
கலவரம்

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. `2000-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதை இன்னும் நிறைவேற்றாதாது ஏன்... கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஏன் இன்னும் பதற்றமான சூழல் நிலவுகிறது... கன்னியாகுமரி மாவட்டத்தில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் எத்தனை பேர் பணி புரிகிறார்கள்... 2000-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை எப்போது நடைமுறை படுத்தப்படும்’ உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி, இது குறித்து உள்துறைச்செயலாளர், டி.ஜி.பி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும்18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு