Published:Updated:

`சப் இன்ஸ்பெக்டர் டு 2ஜி வழக்கு வரை...!' - ஓய்வுபெற்றார் ஓ.பி.சைனி

2010-ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் விளையாட்டில் நடந்த ஊழல் வழக்குகள் மற்றும் பல உயர் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நபர்கள் மீதான ஊழல் வழக்குகளையும் விசாரித்தவர் சைனி.

OP Saini
OP Saini

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் ஓ.பி.சைனி. 1991-ம் ஆண்டு நீதிபதியாக பொறுப்பேற்ற இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். ஓ.பி.சைனி தனது 29 ஆண்டுக்கால பணிக்காலத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தவர். அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்கள் தொடர்புடைய 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கியவர். நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்குக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற நீதியாகத் தேர்வு செய்யபட்டவர் சைனி.

raja - kanimozhi
raja - kanimozhi

ஏறக்குறைய 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் ராஜா, கனிமொழி இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார் ஓ.பி.சைனி. அதேபோல, செங்கோட்டை தாக்குதல் வழக்கில் அவர், ஒரு லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு மரண தண்டனை வழங்கினார். இவரின் இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நீதிபதி எம்.எஸ். சபர்வால் கடந்த 2002-ம் ஆண்டு ஓய்வு பெற்றதையடுத்து, சைனி அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. `5 வழக்குகள், 300 சாட்சிகள் என இந்த வழக்கு சிக்கல் நிரம்பியதாக இருப்பதால் இதை விசாரிக்க முடியாது’ என இரண்டு நீதிபதிகள் மறுத்த நிலையில், செங்கோட்டை வழக்கு விசாரணையை ஓ.பி.சைனி மேற்கொண்டார்.

Vikatan

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரை விடுவித்தவர் சைனி. எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், வழக்குகளில் கடுமையைக் காட்டியவர். 2010-ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் விளையாட்டில் நடந்த ஊழல் வழக்குகள் மற்றும் பல உயர் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நபர்கள் மீதான ஊழல் வழக்குகளையும் விசாரித்தவர் சைனி.

supreme court
supreme court

இப்படியான முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த சைனியின் ஆரம்பக்கால வாழ்க்கை காவல்துறை என்ற புள்ளியிலிருந்து தொடங்குகிறது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓ.பி.சைனி, 1980-களில் டெல்லி காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற `Judicial services' தேர்வில் வெற்றிபெற்று நீதிபதியானார். கடந்த 2000-ம் ஆண்டு டெல்லியில் நடந்த செங்கோட்டை தாக்குதல் வழக்கில் இவர் அளித்த தீர்ப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஆரிஃபுக்கு மரணதண்டனை விதித்தது மட்டுமல்லாது, மற்ற குற்றவாளிகளுக்கும் பல்வேறு சிறைத் தண்டனைகளை வழங்கினார். இந்தத் தீர்ப்பால் நீதிபதி ஓ.பி.சைனி தேசிய அளவில் கவனம் பெற்றார். அவருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால், அந்த வழக்கின் தீர்ப்பையடுத்து, ஓ.பி.சைனிக்கு ஒய் பிரிவு மத்திய தொழில்படை பாதுகாப்புப் பிரிவு போலீஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஓ.பி.சைனி நேற்றுடன் ஓய்வுபெற்றார்.