Published:Updated:

மதுரை: `ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல!’ - உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

``மக்களின் கடைசி புகலிடம் நீதித்துறை. இங்கு ஊழல் இருப்பதை சகிக்க முடியாது'' என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

`நீதித்துறையில் ஊழல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் கடைசி புகலிடம் நீதித்துறை. இங்கு ஊழல் இருப்பதை சகிக்க முடியாது. நீதித்துறையில் உள்ள ஊழலை தடுக்க இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீதித்துறை வளாகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்ய வேண்டும்'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

திருநெல்வேலி மாவட்ட பத்திரப்பதிவுத்துறை ஊழியர் உலகராஜ். லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 2007-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பணி நீக்க உத்தரவு மாற்றியமைக்கப்பட்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உலகராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ``அரசு ஊழியர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். ஊழல் உட்பட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகக்கூடாது. மக்கள் வரிப்பணத்தில் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ஊழல் சமூகத்துக்கு தீமையானது. நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

சமூகத்தில், குறிப்பாக ஏழைகள், நடுத்தர மக்களுக்கு பெரியளவில் தீங்கு விளைவிக்கிறது ஊழல். மக்கள் சட்டப்பூர்வமான உரிமையை பெறுவதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலையை ஊழல் ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பணம் வாங்குவது மட்டும் அல்ல, ஊழல் பல்வேறு வடிவங்களில் உள்ளது.

ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கிறது. இருப்பினும் ஊழல் வழக்குகளின் விசாரணை மெதுவாகவே நடைபெறுகிறது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெரும் அரசு ஊழியர்கள் நேர்மையாக பணிபுரிய வேண்டும். ஆனால் உண்மை, அதற்கு நேர்மாறாக உள்ளது.

ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல. இதை பல முன்னாள் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீதித்துறையில் ஊழல் செயல்பாடுகளை மன சாட்சிப்படி அனுமதிக்க முடியாது. தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடைசி புகலிடமாக நீதித்துறையை மக்கள் நடுகின்றனர். நீதி பரிபாலனத்தில் அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும்.

ஊழல்
ஊழல்

இங்கு ஊழல் இருப்பதை சகிக்க முடியாது. நீதித்துறையில் உள்ள ஊழலை தடுக்க இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நீதித்துறையில் உள்ள ஊழல் தடுப்புத்துறையை பலப்படுத்த வேண்டும்'' என்று கூறியவர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

நீதிமன்றம் சென்று நீதி பெறுவதென்பது இன்று கடினம்!
அடுத்த கட்டுரைக்கு