Election bannerElection banner
Published:Updated:

`அது போன மாசம், இது இந்த மாசம்’ - தேர்தல் ஆணையம் தொடர்பான நீதிமன்றத்தின் கருத்து! - ஓர் அலசல்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

நீதிபதிகளின் இந்தக் கேள்விகள் ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும் மறுபுறம் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. காரணம், தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

“கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம். அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்ததே கொரோனா பரவலுக்கான காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும், தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. பிரசாரம் நடந்தபோதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா..? கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிடில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும். வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்.”

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இப்படிச் சாட்டையைச் சுழற்றியிருப்பது பொது மக்களோ, சமூக ஆர்வலர்களோ அல்ல. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான் இப்படித் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மே மாதம் 2 -ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் கோரி தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வாக்குப்பதிவின்போது கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின்போதும் கரூர் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும்” எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்துதான் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கிறது தலைமை நீதிபதி அமர்வு.

நீதிபதிகளின் இந்தக் கேள்விகள் ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. காரணம், தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே கொரோனா பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அந்த நேரத்தில், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ''அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாகச் சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும்போது, கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நெட்டிசன்கள் ட்ரோல்
நெட்டிசன்கள் ட்ரோல்

கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுவரும் நிலையிலும், கொரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை என்பதால், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய இதே அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், பிரசாரங்களுக்குத் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அதேவேளையில், பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும் தனி மனித விலகலைப் பின்பற்றுவதையும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இது தொடர்பாக, அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

இதைத்தான் தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்துக்கொண்டு, `அது போன மாசம், இது இந்த மாசம்...’ என ட்ரோல் செய்துவருகின்றனர். இந்தநிலையில், நீதிபதிகளின் கருத்து குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

''நீதிபதிகள் சொல்வது ஜட்ஜ்மென்ட் இல்லை. ரிமார்க்ஸ்தான். தவிர, அவர்கள் முழுமையாக என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. செய்தித்தாள்களில் வருவதைவைத்து நாம் எதுவும் சொல்ல முடியாது. அப்படியே அவர்கள் சொல்லியிருந்தாலும், ஒரு நிறுவனத்தை (தேர்தல் ஆணையம்) மட்டும் குறை சொல்வதை நாம் ஏற்க முடியாது. இங்கு தேர்தலால்தான் எண்ணிக்கை அதிகரித்தது என்றால், தேர்தல் நடக்காத மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் பரவல் அதிகரித்ததற்கு யார் பொறுப்பேற்பது? `தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்கிற திருக்குறளை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேற்கொண்டு நான் ஏதும் கருத்து சொல்ல விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் குறித்துக் கருத்துச் சொன்னவர்கள்தான் இது குறித்துச் சிந்திக்க வேண்டும்'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

கிருஷ்ண மூர்த்தி
கிருஷ்ண மூர்த்தி
Wikipedia

இந்தநிலையில், நீதிபதிகளின் கருத்து குறித்து, மருத்துவரும் சமூகச் செயற்பாட்டாளருமான அனுரத்னா பேசும்போது,

''எமெர்ஜென்சி என்கிறபோது, இன்று இப்படியொரு கருத்துச் சொல்லக்கூடிய நீதிமன்றம், தேர்தலுக்கு முன்பாகவே இந்தக் கருத்தைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதுதான் அப்போது சொல்ல முடியாததற்குக் காரணம் என்றால், இப்போதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில்தானே இருக்கின்றன... தவிர, கொலைக் குற்றம் என்பது மிகப்பெரிய வார்த்தை. குற்றத்தைத் தடுக்காமல் அது நடந்த பிறகு என்ன குற்றம் எனக் கண்டுபிடித்துச் சொல்வதுபோல இருக்கிறது.

குற்றம் நடப்பதற்கு முன்பாகவே அதைத் தடுத்திருக்க வேண்டியதுதான் நீதிமன்றத்தின் பணியாக இருந்திருக்க வேண்டும். எவ்வளவோ விஷயங்களில், தானாக முன்வந்து வழக்கு எடுத்து நடத்தும் நீதிமன்றம், இந்த விஷயத்தையும் அப்படிச் செய்து தேர்தல் ஆணையத்தைக் கேள்வி எழுப்பியிருக்கலாம். இப்போது கேள்வி எழுப்பியிருப்பதால் எந்தவிதப் பயனும் கிடையாது. அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீதிமன்றத்தின் இந்தக் கருத்து, சாதாரண மக்களின் கருத்துபோல்தான் இருக்கிறது. பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்களின் கருத்துபோல இல்லை'' என்கிறார் அவர்.

மருத்துவர் அனுரத்னா
மருத்துவர் அனுரத்னா

மேற்கண்ட விஷயங்கள் குறித்து முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமனிடம் பேசினோம்.

''பொதுச்சமூகத்துக்கு எப்படியொரு நியாயமான கோபம் இருக்கிறதோ, அதே கோபத்தைத்தான் தலைமை நீதிபதியும் வெளிப்படுத்தியிருக்கிறார். தேர்தல் நடப்பதற்கு முன்பாக இந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. இரண்டாவது அலையின் தாக்கம் இப்போது அவரைச் சொல்ல வைத்திருக்கலாம். தேர்தல் ஆணையத்தை யாருமே கேள்வி கேட்க முடியாமல் இருக்கும்போது, இப்படியொரு கேள்வியையாவது எழுப்பியிருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஒரேயொரு நிறுவனத்தை மட்டும் கேள்வி எழுப்புகிறார் என்றால், ஆம் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்துக்குத்தானே இருக்கின்றன! மே 2-ம் தேதிக்குப் பிறகு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம்தானே சொல்லியிருக்கிறது...

கொரோனா: `தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை!’ - உயர் நீதிமன்றம் கண்டனம்

தேர்தலுக்கு முன்பாக, இணையவழியாக மட்டும்தான் பிரசாரத்தை நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கலாம். 500 ரூபாய் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டங்களைத் தடுத்திருக்கலாம். கொரோனா வழிமுறைகளையாவது சரியாகப் பின்பற்றச் செய்திருக்கலாம். ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை. நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்காகத்தான் அரசமைப்புச் சட்டம் தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனால், தங்களின் இஷ்டப்படி அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை உண்டு. அதேவேளையில், கும்பமேளாக்களுக்கு தடை இல்லை. அதுதான் தற்போது இருக்கக்கூடிய பிரச்னை. அரசியல் தலைவர்களுக்கு அளிக்கக்கூடிய சுதந்திரத்திலும் பாகுபாடு இருக்கிறது.

 அரி பரந்தாமன்
அரி பரந்தாமன்

அப்போது பிரசாரத்துக்குத் தடை விதிக்காமல், இப்போது பேசுகிறார்களே என சில மக்கள் கோபப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், சட்டரீதியாக அணுகியிருப்பார்கள். ஆனால், இப்போதுள்ள சூழலை முன்னிட்டு, தார்மிகமாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அப்போதே சொல்லியிருந்தால், உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை செய்திருக்கும். பரவாயில்லை, தாமதமாக வந்த கருத்தாக இருந்தாலும், இப்போது அவர்களாவது பேசட்டுமே என்பதுதான் என் கருத்து'' என்கிறார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு