Published:Updated:

``உடுமலை சங்கர் வழக்கும், டெல்லி நிர்பயா வழக்கும்!"- தீர்ப்புகளை ஒப்பிடுகிறார் நீதியரசர் கே.சந்துரு

உடுமலை சங்கர் மற்றும் கௌசல்யா
News
உடுமலை சங்கர் மற்றும் கௌசல்யா

``டெல்லி நிர்பயா வழக்கில், பொதுமக்கள் - ஊடக கவனம் குவிந்திருந்ததால், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தது. ஆனால், உடுமலை சங்கர் வழக்கில் அப்படியான எந்தக் கவனமும் இல்லை. எனவேதான் தீர்ப்பும் ஏமாற்றமளிக்கிறது'' என்கிறார் மேனாள் நீதியரசர் கே.சந்துரு.

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், 6 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்து, 2015-ம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு கௌசல்யாவின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் 2016-ம் ஆண்டு பட்டப்பகலில், உடுமலைப்பேட்டை கடைவீதியில் சங்கரையும் கௌசல்யாவையும் ஒரு மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் சங்கர். படுகாயங்களுடன் உயிர் தப்பினார் கௌசல்யா.

உடுமலை சங்கர் படுகொலை
உடுமலை சங்கர் படுகொலை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கொலைவழக்கில் கௌசல்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்துவந்த திருப்பூர் அமர்வு நீதிமன்றம், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்ததோடு, கௌசல்யாவின் தந்தை சின்னசாமி மற்றும் 5 பேருக்கு தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

ஆணவக் கொலைக்கு எதிரான இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்ததோடு மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது உயர் நீதிமன்றம். இதையடுத்து, சில அரசியல் கட்சியினரும் முற்போக்காளர்களும் இந்தத் தீர்ப்பு குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணான கௌசல்யா, ``உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில் நியாயம் இல்லை. ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்துவந்த காவல்துறை அதிகாரியை மாற்றிவிட்டனர். எங்கள் தரப்புக்கென தனியாக வழக்கறிஞரும் வைத்து வாதாடவும் வழியில்லாததால், அரசு வழக்கறிஞரை வைத்தே வழக்கை நடத்திவந்தோம். வழக்கில் சம்பந்தப்பட்ட சின்னசாமி (கௌசல்யாவின் தந்தை) குற்றவாளி இல்லையென்றால், சங்கர் உயிருடன் இருந்து என்னுடன் வாழ்ந்திருக்க வேண்டும். எனவே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். எனது சட்டப்போராட்டம் தொடரும்'' எனக் கூறியுள்ளார்.

ஆணவப் படுகொலைக்கு எதிரான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கூறவே அஞ்சிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தீர்ப்பை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் பின்னணி, தீர்ப்பு குறித்த மக்களின் பார்வை ஆகியவற்றை நம்மோடு பகிர்ந்துகொண்ட தோழர் இரா.முத்தரசன்,

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

``இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தீர்ப்பை வழங்கியிருந்தது. ஆனால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கப்பெறாமல் விடுதலை செய்யப்பட்டிருந்தவர்களுக்கும் உரிய தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்ற நோக்கில், அரசுத் தரப்பு மேல் முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றமோ கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமியைக் கீழமை நீதிமன்றம் ஏற்கெனவே விடுதலை செய்திருந்ததைப் பாராட்டியுள்ளதோடு, கூடுதலாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமியையும் விடுதலை செய்திருக்கிறது.

மேலும், இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு தூக்கு தண்டனை பெற்றிருந்த 5 பேரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்திருப்பதோடு, இரட்டை ஆயுள் தண்டனை பெற்றிருந்த ஒரு நபர் மற்றும் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றிருந்த ஒரு நபர் என இருவரையும் விடுதலை செய்திருக்கிறது. ஆணவப் படுகொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதையும் தாண்டி, இதேபோன்ற கருத்தோட்டம் உடையவர்களுக்கு இத்தீர்ப்பு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`என் கண் முன்னாலேயே நிகழ்த்தப்பட்ட அந்தப் படுபாதகக் கொலையைச் செய்யத் தூண்டியவர்கள் என் தாயும் தந்தையும்தான்; அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கவேண்டும்' என்று கௌசல்யாவே சொல்கிறார். இன்னும் தெளிவாக, `சின்னசாமி குற்றவாளி இல்லையென்றால், நான் சங்கரோடு சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும்' என்று ஒற்றை வரியிலும் பளிச்செனச் சொல்லியிருக்கிறார் கௌசல்யா என்ற அந்தச் சின்னப்பெண்.

எனவே, மனசாட்சி உள்ள எந்தவொரு நபரும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து இப்படியொரு தீர்ப்பு வெளிவந்திருப்பது இது முதல் முறையல்ல.... ஏற்கெனவே, 1968-ல் கீழ்வெண்மணி கிராமத்தில், 48 பேர் உயிரோடு தீயில் எரித்துக் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், நாகப்பட்டினம் அமர்வு நீதிமன்றம், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியது. ஆனால், தண்டனை பெற்றவர்களோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இதில், `தண்டனைக்குள்ளாகியிருக்கும் நபர்கள் கார், நிலம் என வசதிவாய்ப்பு கொண்ட பெரிய மனிதர்கள். அவர்கள் இப்படியொரு மாபாதகத்தைச் செய்திருக்க வாய்ப்பில்லை' எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தது உயர் நீதிமன்றம். அப்போதும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எங்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதேபோன்றதொரு தீர்ப்பைத்தான் இப்போதும் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது என்பதற்காக ஒரு மனிதனாக வெட்கப்படுகிறேன். நியாயமற்ற இந்தத் தீர்ப்பை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. `இடையிலே என்ன நடந்தது...' என்ற பல்வேறு யூகங்கள் ஏற்படுவதற்கு இந்தத் தீர்ப்பு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சாமான்ய மக்களின் ஒரே நம்பிக்கை, நீதிமன்றம்தான். ஆனால், அந்த நீதிமன்றமே இப்படியெல்லாம் தீர்ப்பு வழங்கினால், மக்களுக்கு எப்படி நீதியின் மீது நம்பிக்கை வரும்?

கீழ்வெண்மணி சம்பவத்தில் இப்படியொரு நியாயமற்ற தீர்ப்பு வழங்கப்பட்டபோது, `சொந்தமாக கார், நிலம் வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலை செய்யமாட்டார்கள் என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. அப்படியென்றால், இனி வயல் - வரப்புகளில்தான் நீதி வழங்கப்படும்' என்று அறந்தை நாராயணன் என்பவர் `ஜனசக்தி' நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தார். சாதாரணமாக இப்படிப்பட்ட மன உணர்வுகள்தான் மக்களிடையே எழும்.

ஒரு கொலைச் சம்பவம் நடந்துவிட்டால், அதற்குப் பழிக்குப் பழியாக இன்னொரு கொலைச் சம்பவம் நடத்தப்படுகிறது. இவையெல்லாம் நீதியின் மீதான நம்பிக்கை மக்களுக்குப் போய்விட்டதைத்தான் உணர்த்துகிறது. இந்தச் சூழ்நிலையில், நீதிமன்றங்களும்கூட இப்படி நியாயமற்ற தீர்ப்புகளை வழங்கினால், சட்டம், சட்டத்துக்கு உட்பட்ட ஆட்சி என்பதெல்லாம் காணாமலே போய்விடும்.

நீதி (மாதிரிப் படம்)
நீதி (மாதிரிப் படம்)

பட்டப்பகலில், படுபயங்கரமாக நிகழ்த்தப்பட்ட மிகக் கொடுமையான படுகொலைச் சம்பவம் இது. இந்தச் சம்பவத்திலேயே இப்படியான தீர்ப்புகள்தான் கிடைக்கும் என்றால், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை என்னவாக மாறும்? `நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்தால், நீதி கிடைக்காது. நீதி வழங்கக்கூடிய பொறுப்பை நாமே எடுத்துக்கொள்வோம்' என்ற மனநிலைதானே மக்களுக்கு உருவாகும்.

இதையெல்லாம் சொல்வதாலேயே `நீதிமன்றத்தை அவமதிக்கிறார்; வன்முறையைத் தூண்டுகிறார்' என்று என்மீது குற்றம் சுமத்துவார்கள். நான், வன்முறையைத் தூண்டவில்லை. வன்முறையைத் தூண்டுகிற எண்ணத்தை, நீதிமன்றத்தின் இதுபோன்ற தீர்ப்புகள் உருவாக்குகின்றன. `ஒருவன் தவறு செய்தால், அவன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யும். நீதிமன்றம் விசாரணை நடத்தி, தண்டனை பெற்றுத் தரும்' என்பதுதான் மக்களின் நீண்டநாள் நம்பிக்கை. இந்த நம்பிக்கை பொய்யாகிவிட்டால்? அதனால்தான் `தந்தையைக் கொன்றவனை மகன் பழிவாங்கினான்' என்பதுபோன்ற செய்திகள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன. நீதிமன்றத்தின் மீது இருக்கக்கூடிய அவநம்பிக்கைகளின் காரணமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கிற விபரீதங்கள்தான் இவை'' என்கிறார் காட்டமாக.

நீதியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிற குடிமக்களின் நம்பிக்கையைச் சுக்குநூறாக அடித்து உடைத்திருக்கும் இத்தீர்ப்பு குறித்தும், அதன் சட்ட நுணுக்கங்கள் குறித்தும் மேனாள் நீதியரசர் கே.சந்துருவிடம் கருத்து கேட்டபோது,

''உடுமலை சங்கர் வழக்கில் கிடைத்திருக்கும் இந்தத் தீர்ப்பு, எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. மற்றபடி இந்தத் தீர்ப்பு சரியா, தவறா என்பதையெல்லாம் மேல்முறையீட்டின்போது, உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இந்தத் தீர்ப்பில் உள்ள சில குறைபாடுகளை மட்டும் நான் சுட்டிக்காட்ட முடியும்.

ஆரம்பத்தில் இந்த வழக்கில் வேகமாக, அதாவது ஒரு வருடத்துக்குள்ளாகவே புலனாய்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் முடிக்கப்பட்டது. இந்த வேகம் மற்ற பல கிரிமினல் வழக்குகளில் நடந்திருக்காது. காரணம்... சங்கர் படுகொலைச் சம்பவம், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியிருந்ததால், இந்த வழக்கில் அரசாங்கத்துக்கும் ஒருவித நிர்பந்தம் இருந்தது. ஆனால், மேல்முறையீட்டுக்காக இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு வந்தபிறகு, வழக்கின் மீதான பொதுமக்களின் ஆதரவும் அனுதாபமும் மறைந்துபோனது. எனவே, அரசாங்கத்துக்கும் பெரியளவில் நிர்பந்தம் இல்லாமல் போய்விட்டது.

கே.சந்துரு
கே.சந்துரு

ஆனால், டெல்லி நிர்பயா வழக்கில், அந்தப் பெண்ணின் பெற்றோரிடமிருந்து மட்டுமல்லாமல் பொதுச்சமூகத்திலிருந்தும் மிகப்பெரிய அழுத்தம் இருந்துவந்தது. அதனால்தான் கீழமை விசாரணை, மேல்முறையீட்டு விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை எனத் தொடர்ச்சியாக அழுத்தம் இருந்துவந்ததால், 'எல்லோருக்கும் பதில் சொல்லியாகவேண்டும்' என்ற நிர்பந்தம் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கும் இருந்தது. பொதுவாக கிரிமினல் வழக்குகளில் இதுபோன்ற அழுத்தங்கள் இருப்பது, வழக்கின் தன்மையை மாற்றிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லிவந்தாலும்கூட, குறிப்பிட்ட வழக்குகளில் பொதுமக்கள் கவனம் இழந்துவிட்டார்கள் என்றால், அந்த வழக்கின் கதி என்னவாகும் என்பதற்கு, சங்கர் படுகொலை வழக்கு ஓர் உதாரணம்.

இந்த வழக்கு விசாரணைகள் வெளிப்படையாக வெளியில் தெரியவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதிகளும் ஒருவர் மதுரையிலும் இன்னொருவர் சென்னையிலுமாக இருந்துகொண்டு காணொலிக் காட்சியில் விசாரித்தனர். பின்னர் நேரில் விசாரித்தார்கள்; மறுபடியும் காணொலி விசாரணைக்கு மாறினார்கள். கடைசியில், எழுத்து மூலமாக வாதம் செய்தனர்... இப்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் முடிந்த வழக்கில், 4 மாதங்கள் கழித்து இப்போது தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கிடையே, வழக்கில் பொதுமக்களின் பங்கு அல்லது ஊடகத்தின் பங்கு என்னவென்று பார்த்தால், அது 'ஜீரோ'வாகத்தான் இருந்திருக்கிறது.

வழக்கில் யார், என்ன வாதாடுகிறார்கள், இதுவரையில் என்ன நடந்திருக்கிறது என்பதெல்லாம் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. ஆக, காணொலி வழியாக நடைபெறும் விசாரணைகளில், பொதுமக்களின் பார்வை என்பது முழுவதுமாக மறைக்கப்பட்டு விடுகிறது என்பது உறுதியாகியிருக்கிறது. ஆனால், நிர்பயா வழக்கு விசாரணைகளின்போது தினம் தினம் கோர்ட் வாசலில், பொதுமக்கள் 500 பேர் நின்றுகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வாய்தா பற்றியும் பத்திரிகைகள் எழுதிவந்தன. எனவே, இதுபோன்ற வழக்குகளில், பொதுமக்களின் கவனிப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயம்.

அடுத்ததாக இந்த வழக்கில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு இருப்பதால், பாதிக்கப்பட்டவர் தனது தரப்பில் சிறப்பு வழக்கறிஞரை வைத்துக்கொள்வதற்கு சட்டப்படி அனுமதி இருக்கிறது. எனவே, அரசுத் தரப்பில் கீழமை நீதிமன்றத்தில் நடத்திமுடிக்கப்பட்ட வழக்கு, மேல்முறையீட்டுக்கு வரும்போது போதுமான அளவுக்கு அனுபவம் பெற்ற, சமூகப் பிரச்னைகளில் புரிதல் கொண்ட சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை வைத்திருந்திருக்க வேண்டும். ஏனெனில், வழக்கறிஞர்களின் வாதம் என்பதும் மிக முக்கியம். அந்தவகையில், இந்த வழக்கின் பின்னணியில் சாதி என்ற கட்டமைப்பு எந்தளவு உள்ளது என்பதையெல்லாம் பார்க்காமல், வெறுமனே தனிப்பட்ட இருவரது பகையாக மட்டுமே வழக்கு பார்க்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மாவட்ட நீதிமன்றத்தில், ஒட்டுமொத்தமான பார்வையிலேயே இந்த வழக்கை நகர்த்திச் சென்றதால், ஓர் உறுதியான தீர்ப்பை அவர்களால் வழங்க முடிந்தது. ஆனால், உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தபோது, அவை 3 பிரிவுகளாகிவிட்டன. அதாவது மரண தண்டனை மீது வந்த தர்ம அப்பீல் ஒன்று, அன்னலட்சுமிக்கும் தண்டனை வழங்கவேண்டும் என அரசுத் தரப்பு கொண்டுவந்த அப்பீல் ஒன்று, மரண தண்டனை பெற்றவர்களின் தரப்பிலிருந்து வந்த அப்பீல் ஒன்று எனத் தனித்தனியான விசாரணைகளின் வழியேதான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த வழக்கை ஒட்டுமொத்தமான ஒரு பார்வையில் பார்க்காததின் விளைவு இது.

சங்கரைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தால் போதும் என்ற அடிப்படையில் தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, ஒரு கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு, அந்தக் கொலைக் குற்றத்துக்கான 3 வித காரணிகளை நிரூபிக்கவேண்டும். அதாவது, குற்றம் நடைபெற்றது, ரகசிய சதி, குற்றத்துக்கான பொது நோக்கம் என்ற மூன்றும்தான் அவை.

இதில் குற்றம் நடைபெற்று சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதிலும் பெரிய பிரச்னை கிடையாது. இதற்கு அவரவர் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஆனால், குற்றம் நடைபெற்று அவர்களுக்கான தண்டனைகளும் கொடுக்கப்பட்ட பிறகு 'இந்தக் குற்றம் யாருடைய பேரில் நடத்தப்பட்டது - யாருடைய தூண்டுதலில் நடத்தப்பட்டது, இதில் யாருடைய சதி இருக்கிறது' என்ற அம்சங்களையெல்லாம் போதுமான அளவுக்கு விளக்காமல் விட்டுவிட்டார்கள் நீதிபதிகள். அதனால், யாருக்காக இந்தக் குற்றம் நடைபெற்றது என்பது குறித்த சரியான விளக்கம் இந்தத் தீர்ப்பில் இல்லை.

அதாவது, அன்னலட்சுமியை விடுதலை செய்ததற்கான காரணம் சின்னசாமிக்கும் பொருந்தும்தானே என்கிறார்கள். மாறாக, அன்னலட்சுமிக்கும் தண்டனை வழங்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் அடிப்படையில், அன்னலட்சுமி - சின்னசாமி என இருவருக்குமே தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் இந்த வழக்கின் முழுமையான தீர்ப்பாக இருக்கும்.

சின்னசாமி - அன்னலட்சுமி
சின்னசாமி - அன்னலட்சுமி

24 வயதான, வேலைக்குக்கூட செல்லாத ஒரு பெண். அந்தப் பெண்ணின் கண்ணெதிரிலேயே அவளது கணவரைப் படுகொலை செய்திருக்கிறார்கள். தாக்குதலின்போது அந்தப் பெண்ணும் படுகாயமடைந்திருக்கிறாள். அவள் சாட்சி சொல்லப்போவதும் அவளது அம்மா - அப்பா என நேரடி ரத்த சொந்தங்களான பெற்றோர் மீதுதான். நீதி வழங்கியவர்கள் இந்த அம்சங்களையெல்லாம் பார்க்கத் தவறிவிட்டனர். ஆனால், கீழமை நீதிமன்ற விசாரணைகளில் நிறைய ஓட்டைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். கீழமை விசாரணையில் மட்டுமல்ல.... மேல்முறையீட்டு விசாரணையிலும்கூட ஓட்டைகள் இருக்கின்றன.

கௌசல்யா என்ற சாட்சியின் அடிப்படையில்தான் குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறார்கள். ஆக, சாட்சியின் ஒரு பகுதியைக் கேட்டுக்கொண்டு தண்டனை கொடுத்தவர்கள், அந்த சாட்சியின் இன்னொரு பகுதியைக் குறை சொல்வதென்பது சரியல்ல என்பது என் அபிப்ராயம்.

ஒட்டுமொத்தமான பார்வையோடு இந்த வழக்கை அணுகாமல், வழக்கில் உள்ள சிறுசிறு ஓட்டைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு குற்றவாளிகளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சாதியக் காழ்ப்புணர்வு இருந்திருக்கிறது; திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.

சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையிலேயே, `பட்டப்பகலில் பொதுமக்கள் பார்வையில் கடைவீதியில் சம்பவம் நடத்தப்பட்டிருக்கிறது' என்று குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக, குற்றவாளிகளைப் பிடித்தாகிவிட்டது. குற்றவாளிகளைத் தூண்டிவிட்டவர்களுக்கு எப்படி விடுதலை கொடுக்கமுடியும்?

கௌசல்யா
கௌசல்யா

200 கி.மீ தொலைவிலிருந்து வந்திருந்து, தொடர்ச்சியாக நோட்டமிட்டு, குறி தவறாமல் இந்தத் தாக்குதலை குற்றவாளிகள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றால், இதன் பின்னே மிகப்பெரிய பின்னணி இருக்கவேண்டும். காவல்துறை இந்த வழக்கில், மிகச்சரியாகச் செயல்பட்டிருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், குற்றத்தை தூண்டியவர்கள் தப்பித்துவிட்டார்கள். எனவே, இது ரொம்பவும் பலவீனமான தீர்ப்பாகவே எனக்குத் தெரிகிறது'' என்றார் தெளிவாக.