Published:Updated:

தஹில்ரமானியின் இடமாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன? - மார்க்கண்டேய கட்ஜூ கூறும் புதிய தகவல்

Vijaya Tahilramani
News
Vijaya Tahilramani

''நான் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது அறிந்துகொண்ட வகையில், சுறுசுறுப்பு இல்லாதவர்கள் அல்லது ஆர்வம் குறைந்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை இல்லை!''

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர், விஜயா கமலேஷ் தஹில்ரமானி. மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த இவரை மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் மாற்றியது. மேகாலயா செல்ல மறுத்த தஹில்ரமானி, பதவியை ராஜினாமா செய்தார். தஹில்ரமானியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Markandey Katju
Markandey Katju

லாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்தினர். எனினும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம், தஹில்ரமானியின் இடமாற்றத்தை மறுபரீசிலனை செய்ய மறுத்துவிட்டது. தஹில் ரமானியின் இடமாற்றத்துக்குத் தகுந்த காரணங்கள் இருப்பதாக கொலிஜியம் தெரிவித்துள்ளது. விளக்கம் தரவும் தயாராக இருப்பதாக கொலிஜியம் கூறியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு முன்னதாக, பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) தஹில்ரமானி பணியாற்றியுள்ளார். பெரிய நீதிமன்றங்களில் பணியாற்றிய இவரை, மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம், 75 நீதிபதிகளைக்கொண்ட பெரிய நீதிமன்றம். மேகாலயா தலைமை நீதிமன்றம், 3 நீதிபதிகளை மட்டுமே கொண்ட சிறிய நீதிமன்றம். 2013-ம் ஆண்டுதான் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

மேகாலயா நீதிமன்றம்
மேகாலயா நீதிமன்றம்

தஹில்ரமானியின் இடமாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தன் கருத்தை வெளியிட்டுள்ளார். தஹில்ரமானியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தவறான முன்னுதாரணம் என்று அவர் கூறியிருப்பது இந்த சர்ச்சையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தி வீக் இதழில் மார்க்கண்டேய கட்ஜூ எழுதியுள்ள கட்டுரையில், ''சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமானி ராஜினாமா செய்ததுகுறித்து கேள்விப்பட்டேன். ஆன்லைன் போர்ட்டலில், அதுகுறித்த கட்டுரை ஒன்றையும் நான் படித்தேன். அதில், கொலிஜியம் முறை தோற்றுவிட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற கொலிஜியம் எடுத்த முடிவுகளால், நான்கூட பாதிக்கப்பட்டுள்ளேன். அந்த ஆன்லைன் போர்ட்டலில் எழுதப்பட்ட கட்டுரை பல தவறான தரவுகளைக் கொண்டிருந்தது. தஹில்ரமானியின் மாற்றம்குறித்து உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரசித்திபெற்ற வழக்கறிஞர்களிடம் நான் போனில் உரையாடினேன்.

Vijaya Tahilramani
Vijaya Tahilramani

என்னிடத்தில் சில உண்மையான காரணங்களை அவர்கள் முன் வைத்தனர். நான் படித்த ஆன்லைன் கட்டுரையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமானியைத் தலைவராகக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற கொலிஜியம், சில வழக்கறிஞர்களின் பெயர்களை நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்குப் பரிந்துரைசெய்திருந்தது. பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தகுதியானவர்களா என உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஆய்வு செய்துள்ளது. தகுதியின் அடிப்படையில் சென்னை கொலிஜியம் பரிந்துரை செய்த பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது, அடிக்கடி சாதாரணமாக நடக்கும் சம்பவம்தான். இதற்கும் தஹில்ரமானியின் இடமாற்றத்துக்கும் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை.

தஹில்ரமானியின் இடமாற்றத்துக்கு உண்மையான காரணங்கள் என நான் அறிந்தது இவைதாம். சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பான பெரிய நீதிமன்றம். கடும் உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய தலைமை நீதிபதிகளே இங்கே தேவை. மதியம் 12 அல்லது 12.30 மணி வரைதான் தலைமை நீதிபதி தஹில்ரமானி நீதிமன்றத்தில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். மதிய உணவுக்குப் பிறகு தஹில்ரமானி நீதிமன்றத்தில் இருப்பதில்லை என்கிறார்கள். இதனால், மற்ற நீதிபதிகளும் மதியத்துக்கு மேல் நீதிமன்றத்தில் இருப்பதில்லை எனவும் சொல்கிறார்கள். தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் இருந்தாலும், வழக்குகளில் இடைக்காலத் தடை மற்றும் வழக்கை ஒத்திவைப்பதாகவும் இறுதித்தீர்ப்பு எப்போதாவதுதான் வழங்குவதாகவும் சொல்கிறார்கள். சென்னை போன்ற நீதிமன்றத்துக்கு, முன்னின்று வழிநடத்தக் கூடிய தலைமை நீதிபதியே தேவை. இதன் காரணமாகவே குறைந்த அளவு பணிகள் உள்ள மேகாலயா தலைமை நீதிமன்றத்துக்கு தஹில்ரமானி மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை போன்ற நீதிமன்றத்துக்கு, முன்னின்று வழிநடத்தக் கூடிய தலைமை நீதிபதியே தேவை!
மார்க்கண்டேய கட்ஜூ

அதிக வழக்குகள் தேங்கிக்கிடக்கும் நீதிமன்றங்களில் சென்னை நீதிமன்றமும் ஒன்று. சென்னை நீதிமன்றத்துக்கு என்று தனி கௌரவம் உண்டு. தேங்கிக்கிடக்கும் வழக்குகள், அதில் அளிக்க வேண்டிய தீர்ப்புகுறித்து நீதிபதிகளுக்கு கடுமையான அழுத்தம் இருக்கிறது. நான் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது அறிந்துகொண்ட வகையில், சுறுசுறுப்பு இல்லாதவர்கள் அல்லது ஆர்வம் குறைந்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை இல்லை.''

மார்க்கண்டேய கட்ஜூ தன் கட்டுரையில் தெரிவித்துள்ள விஷயங்கள் இவை.

இடமாற்றத்தைக் காரணம் காட்டி, இதற்கு முன்னர் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2017- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 2-வது சீனியர் நீதிபதியாக இருந்த ஜெயந்த் பட்டேல், திடீரென அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பையும் அவர் இழந்தார். கடந்த 2004-ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த இளம் பெண் இஷரத் ஜகான், குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை, நீதிபதி ஜெயந்த் பட்டேல்தான் விசாரித்தார். இவரின், உத்தரவின் பேரிலேயே குஜராத்தைச் சேர்ந்த பல போலீஸ் அதிகாரிகள்மீது வழக்கு பதியப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத்திலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதியாகவேண்டிய தருணத்தில், அலகாபாத் நீதிமன்றத்துக்கு ஜெயந்த் பட்டேல் மாற்றப்பட்டார். அங்கே, 3-வது சீனியர் நீதிபதி என்ற நிலைக்கும் தள்ளப்பட்டார். விளைவாக... ஜெயந்த் பட்டேல் பதவியை ராஜினாமா செய்தார்.

நீதியரசர் சந்துரு
நீதியரசர் சந்துரு

ஆனால், தஹில்ரமானி விஷயத்தில் பணி மாற்றத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. அதே பணி, அதே சம்பளம், படித்தொகைகள்தான் வழங்கப்படுகின்றன. இந்த விஷயத்தில், மார்க்கண்டேய கட்ஜூவின் கருத்தும் முன்னாள் நீதியரசர் சந்துருவின் கருத்தும் ஒத்துப்போகின்றன என்பது பலராலும் கவனிக்கப்படுகிறது.

"மேகலாயா, இந்தியாவின் ஒரு மாநிலம்தானே. அங்கே, சென்று பணியாற்ற மறுப்பதை நான் நியாயமான விஷயமாகப் பார்க்கவில்லை. தற்போது, மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.கே. மிட்டல், பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து அங்கே சென்று பணியாற்றுகிறார். நீதிபதி கீதா மிட்டல், ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுகிறார். அதுபோல, தஹில்ரமானியும் மேகாலயா செல்வதுதான் சரி. உயர் நீதிமன்றங்களில் பெரியது சிறியது என்ற எந்த வரையறையும் கிடையாது'' என்று சந்துரு தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கு அப்போதைய பம்பாய் நீதிமன்றத்தில் நடந்தது. பம்பாய் தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமானி, இந்த வழக்கில் பணியைச் சரிவர செய்யாத இரு டாக்டர்கள் தடயங்களை அழிக்க முயன்றதாக, ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 5 போலீஸாரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். தஹில்ரமானி பணி மாற்றத்துக்கும் இந்த தீர்ப்புக்கும் தொடர்பு உள்ளதா என நீதிபதி சந்துருவிடம் கேட்டால்... இல்லை என்றே மறுக்கிறார். ''பம்பாய் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு மே மாதத்தில் தஹில்ரமானி அந்த வழக்கில் தீர்ப்பளித்தார். 2018-ம் ஆண்டு , சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். எனவே, இந்த விஷயத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக நான் கருதவில்லை'' என்கிறார் சந்துரு.

தஹில்ரமானியின் ராஜினாமாவை ஏற்பதும் மறுப்பதும் குடியரசுத்தலைவரின் கையில் இருக்கிறது. அதுவரை, இந்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.