Published:Updated:

நீதிபதி முரளிதரின் திடீர் பணியிட மாற்றம் எழுப்பும் கேள்விகள் என்னென்ன?

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசைக் கடுமையாக சாடிய அன்றைய தினமே நீதிபதி முரளிதரின் பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

``வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பா.ஜ.க அரசியல்வாதிகள் மீது எப்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வீர்கள்..? அடிப்படை உதவியை ஏற்படுத்தி தருவதற்குக்கூட நீதிமன்றம் தலையிட வேண்டுமா..?" என்கிற கேள்விகளை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை போன்ற சம்பவத்தை டெல்லியில் மீண்டும் அரங்கேற விட மாட்டோம் என்கிற வலுவான கருத்துகளைத் தெரிவித்து எல்லோரையும் அதிர வைத்தவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தங்களுடைய தலையாயக் கடமைகளிலிருந்து நீதிமன்றங்கள் விலகிவிட்ட காலகட்டத்தில் ஒரு நீதிபதி எதார்த்தமாகக் கேட்க வேண்டிய கேள்விகள் ஆச்சர்யமளிப்பதாகவும் அதீத முக்கியத்துவம் பெறுவதும் இயல்பே. இந்திய நீதித்துறை சமீப ஆண்டுகளில் செயல்பட்டு வரும் மெத்தனப் போக்கு பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டுவிட்டது. புதிதாக அதற்குள் செல்ல வேண்டியதில்லை. பிப்ரவரி 25 நள்ளிரவு தொடங்கி பிப்ரவரி 26 மாலை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரங்கேறிய சம்பவங்களும் அதைத் தொடர்ந்த நீதிபதி முரளிதரின் பணியிட மாற்றமும் பல்வேறு கேள்விகளை நம் முன் எழுப்பியுள்ளன. அன்றைய இரவே முரளிதரை டெல்லியிலிருந்து பஞ்சாப் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி மத்திய அரசு அறிவித்தது.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், பணியிட மாற்றங்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைக்க மத்திய அரசு அதற்கான அறிவிப்புகளை வெளியிடும். அவ்வாறு பல நியமனங்கள், பணியிட மாற்றங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.

நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவற்றில் அரசு தலையிடுவதாகக் கூறிதான் 1993-ம் ஆண்டு அந்த அதிகாரத்தை மத்திய அரசிடமிருந்து உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டது. கொலிஜியம் முறை உருவானது. அப்போது வரை அரசு செய்து வந்த பணியை உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் எடுத்துக்கொண்டது. ஆனாலும், அந்த சர்ச்சைகள் ஓய்ந்ததாக இல்லை.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியைப் பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்தது. கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரினார் தஹில் ரமானி. அந்தக் கோரிக்கையையும் மீறி பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் தஹில் ரமானி.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
`பா.ஜ.க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்; வன்முறையைக் கண்டித்த நீதிபதி!' - இடமாற்ற  சர்ச்சை #DelhiRiots

அதுபோல பிப்ரவரி மாதம் கூடிய கொலிஜியம், முரளிதரை பஞ்சாப் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. டெல்லி பார் கவுன்சில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டது. கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும்போதே பணியிட மாற்றம் அதிகாரபூர்வமாகும். பொதுவாக, கொலிஜியத்தின் எந்தவொரு பரிந்துரையின் மீது மத்திய அரசு உடனடியாக முடிவெடுப்பதில்லை.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நள்ளிரவு டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்தது நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு. நள்ளிரவு அவரின் வீட்டிலே நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உதவிகளை டெல்லி போலீஸும் டெல்லி நிர்வாகமும் செய்து தர வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மறுநாள் பிப்ரவரி 26-ம் தேதி காலை அதே வழக்கின் விசாரணை தொடர்ந்தது. அப்போது டெல்லி காவல்துறைக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பா.ஜ.க அரசியல்வாதிகளின் வீடியோக்கள் நீதிமன்றத்திலே திரையிடப்பட்டு இதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் எனக் காவல்துறைக்குக் கேள்வி எழுப்பப்பட்டது. எஃப்.ஐ.ஆர் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அரசு வாதிட்டது. மத்திய அரசுக்கும் டெல்லி காவல்துறைக்கும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்த முரளிதரின் அமர்வு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. வழக்கு விசாரணையை மறுதினமும் (பிப்ரவரி 27) தொடர இருந்தது.

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

இந்த நிலையில் பிப்ரவரி 26-ம் தேதி இரவே முரளிதரை பணியிடமாற்றும் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய அதே தினம் முரளிதரின் பணியிட மாற்ற உத்தரவு வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பின. பணியிட மாற்றத்துக்கு முரளிதர் ஏற்கெனவே ஒப்புக்கொண்டார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக, அனுபவம் வாய்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடம் மாற்றப்படுவது வேறொடு உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்காகவும் இருக்கக்கூடும் எனச் சொல்லப்பட்டது.

இதைப்பற்றி காங்கிரஸ் எம்.பி ஏ.எம்.சிங்வி தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``முரளிதரை பணியிடம் மாற்றம் செய்ய என்ன அவசியம் வந்ததென்று தெரியவில்லை. தற்போதைய பஞ்சாப் தலைமை நீதிபதி ஓய்வு பெற சில வருடங்கள் இருக்கின்றன. அவர் உச்ச நீதிமன்றத்துக்குப் போவதற்கான வாய்ப்புகளும் இல்லை. இந்த நிலையில் நீதிபதி முரளிதரை பஞ்சாப் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது” என்றுள்ளார்.

ஆனால், காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க முற்றிலுமாக மறுக்கிறது. இதுபற்றி பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.டி.ராகவன் நம்மிடம் பேசுகையில், ``பிப்ரவரி 12-ம் தேதி கூடிய கொலிஜியம் பரிந்துரைத்ததைத்தான் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஒத்துவராத நீதிபதிகளை பழிவாங்கியதை அனைவரும் அறிவர். காங்கிரஸின் குற்றச்சாட்டு வெறும் அரசியலே” என்றார்.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

பிப்ரவரி 27 காலை முரளிதர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய அலுவல் பணிகளை முடித்துக்கொண்டார். அதற்கு பின்னர் அதே வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஹரிசங்கர் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குக்கு முரளிதர் அமர்வு கொடுத்த முக்கியத்துவத்தை டி.என்.பட்டேல் அமர்வு கொடுக்கவில்லை. மாறாக அரசின் வாதங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதி வரை ஒத்திவைத்தது.

``வன்முறை தொடர்பான வழக்கில் முரளிதர் அமர்வு காட்டிய அவசரத்தை புதிய அமர்வு ஏன் காட்டவில்லை? கொலிஜியத்தின் மற்ற பரிந்துரைகள் பல மாதங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது நீதிபதி முரளிதர் மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய அன்றைய தினமே அவரை பணியிடமாற்றி உத்தரவு பிறப்பித்தது வெறும் தற்செயலான ஒன்றா? வன்முறையின்போது டெல்லி காவல்துறை சரியாக நடந்துகொள்ளவில்லை என உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ள நிலையில் புதிய அமர்வு டெல்லி காவல்துறைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், அவர்களின் வாதத்தை ஏற்று விசாரணையை ஒரு மாதத்துக்கும் மேல் ஒத்திவைத்தது ஏன்?”

பிரதமர் மோடியுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
பிரதமர் மோடியுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
`உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படும் மேதை மோடி’ - நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்

இந்தக் கேள்விகளுக்கான விடை கிடைக்கவில்லை என்பது இன்று ஜனநாயகத்துக்கு அடிக்கப்படக்கூடிய எச்சரிக்கை மணியாக உள்ளன. ``அரசுக்கும் நீதித்துறைக்கும் ஏற்படுகிற இணக்கம் என்பது ஜனநாயகத்துக்கான சாவு மணி” என்கிற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வரின் கூற்று காலப்போக்கில் மெய்ப்பட்டுவிடக்கூடாது.

அடுத்த கட்டுரைக்கு