கர்நாடக மாநிலம் குண்டபுராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்திருந்தது. அதையடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் கல்லூரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திவந்தனர். ஆனால், இந்த போராட்டமானது தற்போது இந்து மாணவ மாணவிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக மதக்கலவரமாக மாறும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நேற்று கூட கர்நாடகாவில், கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த மாணவியை, இந்து மாணவர்கள் கூட்டமாக நின்று கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த சிலமணி நேரங்களிலேயே, அடுத்த மூன்று நாள்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்ததை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை கூடுதல் அமர்வுக்கு அனுப்பியுள்ளது. மேலும், பெங்களூருவிலுள்ள கல்வி நிறுவனங்களைச் சுற்றி 200 மீட்டர் பரப்பளவிற்கு போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் கூடுவதற்கு கர்நாடக காவல்துறை இரண்டு வாரங்கள் தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
