Published:Updated:

`இது உங்களின் முழுத் தோல்வி’ - பெண் மருத்துவர் கொலை வழக்கில் கேரள அரசு, போலீஸைச் சாடிய நீதிமன்றம்

கொலைசெய்யப்பட்ட இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ்

டாக்டர் வந்தனா தாஸ், ஏதோ எடுக்கச் சென்றபோது பின்னால் சென்று கத்தரிக்கோலால் குத்தியிருக்கிறார் சந்தீப். ஓடி தப்பிக்க முயன்ற வந்தனா தாஸை துரத்திச் சென்று அவர் குத்தியிருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:

`இது உங்களின் முழுத் தோல்வி’ - பெண் மருத்துவர் கொலை வழக்கில் கேரள அரசு, போலீஸைச் சாடிய நீதிமன்றம்

டாக்டர் வந்தனா தாஸ், ஏதோ எடுக்கச் சென்றபோது பின்னால் சென்று கத்தரிக்கோலால் குத்தியிருக்கிறார் சந்தீப். ஓடி தப்பிக்க முயன்ற வந்தனா தாஸை துரத்திச் சென்று அவர் குத்தியிருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

கொலைசெய்யப்பட்ட இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் சந்தீப்(42). குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் மது போதைக்கு அடிமையானதால், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே, அவர் மதுபோதையில் விடுபட சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சந்தீப், அவரின் தம்பியிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் பூயப்பள்ளி போலீஸார் சந்தீப்பைக் கைதுசெய்தனர். நேற்று முன்தினம் இரவு சந்தீப்பைக் கைதுசெய்த போலீஸார் நேற்று காலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவுசெய்தனர்.

மருத்துவர் கொலை வழக்கில் கைதான சந்தீப்
மருத்துவர் கொலை வழக்கில் கைதான சந்தீப்

அதற்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனைக்காக அதிகாலை 4:30 மணியளவில் கொட்டாரக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்துவந்த டாக்டர் வந்தனா தாஸை(22) கத்தரிக்கோலால் குத்திக் கொலைசெய்தார். இதில், மருத்துவமனை காவலாளி, போலீஸார் உள்ளிட்டவர்களுக்கும் கத்தரிக்கோல் குத்து விழுந்திருக்கிறது. தொடர்ந்து திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வந்தனா தாஸ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கோட்டயம் குறுப்பந்தரை பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ் - வசந்தகுமாரி தம்பதியின் ஒரே மகளான டாக்டர் வந்தனா தாஸ் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. மருத்துவமனையில் பணியிலிருந்த டாக்டர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கேட்டும், வந்தனா தாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கக் கேட்டும் கேரளா மாநிலத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் (மே 11) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக கேரள மாநில மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர்.

வந்தனாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன்
வந்தனாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன்

இளம் பெண் மருத்துவர் வந்தனா உடலில் 11 இடங்களில் கத்தரிக்கோல் குத்துக் காயங்கள் இருந்திருக்கின்றன. தலைப் பகுதியில் மூன்று குத்துக்கள் விழுந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. சந்தீப்பின் காலில் இருந்த காயத்துக்கு மருந்துவைத்த டாக்டர் வந்தனா தாஸ், ஏதோ எடுக்கச் சென்றபோது பின்னால் சென்று கத்தரிக்கோலால் குத்தியிருக்கிறார். பின்னர், ஓடி தப்பிக்க முயன்ற வந்தனா தாஸை துரத்திச் சென்று 'உன்னைப் போன்றவர்களைக் கொல்லாமல் விடமாட்டேன்' எனக்கூறி குத்தியிருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தீப் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வந்தனா தாஸின் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரின் பெற்றோரைச் சந்தித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து முதல்வர் பினராயி விஜயன், "பணியின்போது பெண் மருத்துவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் மிகவும் துக்ககரமானது. இந்தக் கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இளம்பெண் மருத்துவரின் கொலை சம்பவம் அதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவத்துறையினர்மீது தாக்குதல் நடத்துபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

டாக்டர் வந்தனா தாஸை கொலை செய்த சந்தீப்பை மடக்கி பிடித்த போலீஸார்
டாக்டர் வந்தனா தாஸை கொலை செய்த சந்தீப்பை மடக்கி பிடித்த போலீஸார்

இதற்கிடையே டாக்டர் வந்தனா தாஸ் கொலை குறித்து கேரளா உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ``இது அரசு அமைப்பின் முழுத் தோல்வி. மருத்துவமனையில் உதவிப் பிரிவு இருந்தால் மட்டும் போதாது. அந்த நபர் அசாதாரணமாகச் செயல்படுவதை நீங்கள் (போலீஸ்) அறிந்ததும், நீங்கள் அவரைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். போலீஸ் எப்போதும் எதிர்பாராத ஒன்றைதான் எதிர்பார்க்க முடியும். மற்றபடி போலீஸே தேவை இல்லையே. இந்தப் பெண்ணை நீங்கள் காப்பதில் தோல்வியடைந்துவிட்டீர்கள்தானே.

இதற்குத்தான் நாங்கள் பயந்தோம். இது போன்று நடக்கலாம் என்று கடந்த காலத்தில் கூறியிருந்தோம். டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதற்கு நீங்கள் மன்னிப்புக் கூறுவீர்களா... இன்று வேலைநிறுத்தம் காரணமாக எந்த நோயாளிக்கும் ஏற்பட்ட பிரச்னைக்கு மருத்துவர்களைக் குறை கூற முடியுமா?" என்று மாநில அரசிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வியெழுப்பியது.

கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றம்

மேலும் மருத்துவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் வருத்தமாக இருக்கிறது எனவும், போலீஸின் கைகளில் துப்பாக்கி இல்லையா... எனவும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது. மக்களின் அடிப்படை பாதுகாப்பு போலீஸ் கையில் இல்லையா... என விமர்சித்த நீதிமன்றம், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றால் மருத்துவமனைகளை மூட வேண்டியதுதான் என்றது உயர் நீதிமன்றம் காட்டமாக. இந்த வழக்கு சம்பந்தமாக டி.ஜி.பி அனில் காந்த் ஆன்லைன் மூலம் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.