Published:Updated:

போக்ஸோ வழக்குகளுக்காக 57 விரைவு நீதிமன்றங்கள்! - கேரள அரசு அறிவிப்பு

மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற சிறார் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

போக்ஸோ கேரளா
போக்ஸோ கேரளா

தேசிய மனித உரிமை ஆணையம் அண்மையில் வெளியிட்டிருந்த தரவுகளின்படி, கேரளாவில் 9,000-க்கும் மேலான போக்ஸோ (POCSO) வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தது. இதற்கிடையே, கேரளமுதல்வர் பினராயி விஜயன் சிறார் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான இந்த வழக்குகளை விரைந்து முடிக்க 57 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற சிறார் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையொட்டி 2019-2020 மற்றும் 2020-2021 நிதியாண்டுகளில் 57 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் வழக்குகளை முடிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கேரள சட்டப்பேரவையில் நேற்று கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், ``2016-ம் வருடத்துடன் ஒப்பிடுகையில் 2019-ல் போக்ஸோ வழக்குகளில் தண்டனை விகிதம் 24 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியைவிட அதிகம். விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் அதே நேரத்தில் 14 மாவட்ட நீதிமன்றங்களும் இந்த வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்களாகச் செயல்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

`ஒரு மாவட்டத்தில் 100 போக்ஸோ  வழக்குகள் இருந்தால்..!’ - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாளையார் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் மொத்த மாநிலத்தையும் கொந்தளிப்படையச் செய்திருக்கும் நிலையில், அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.