மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஊடகத்தில் தான் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கையை நள்ளிரவு 12 மணிக்குள் தன்னிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றச் செயலாளருக்கு உத்தரவு போட்ட நிகழ்வு பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
முன்னதாக மேற்கு வங்க பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தலைமையிலான அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இதுவரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் எம்.எல்.ஏ-க்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில்தான் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், இந்த வழக்கு குறித்து செய்தி ஊடகத்திடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், செய்தி ஊடகத்திடம் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பேசியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கொல்கத்தா உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.
உயர் நீதிமன்றப் பதிவாளரும் அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார். பின்னர் இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கை நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயிடமிருந்து வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற தற்காலிகத் தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொண்டது. இந்த விஷயம் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்குத் தெரியவரவே, நேற்றிரவே உச்ச நீதிமன்ற பொதுச்செயலாளருக்கு ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

அதில், ``வெளிப்படைத்தன்மைக்காக, நான் ஊடகங்களில் அளித்த பேட்டி தொடர்பான அறிக்கை, அதன் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பு மற்றும் பதிவாளரின் அசல் வாக்குமூலத்தை இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணிக்குள் என் முன் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் பொதுச்செயலாளருக்கு உத்தரவிடுகிறேன்" என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த உத்தரவு குறித்து அறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர், ``நீதித்துறை ஒழுக்கத்தைக் கருத்தில்கொண்டு இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கக் கூடாது. எனவே, நாங்கள் தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடைவிதிக்கிறோம். மேலும், இந்த உத்தரவை உடனடியாக கொல்கத்தா உயர் நீதிமன்றப் பதிவாளருக்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்ற பொதுச்செயலாளருக்கும் நாங்கள் உத்தரவிடுகிறோம். பதிவாளர் இதை உயர் நீதிமன்ற நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர். ஒரே இரவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், உயர் நீதிமன்ற நீதிபதியும் தங்களுக்குள்ளே இவ்வாறு உத்தரவுகள் பிறப்பித்திருப்பது நீதித்துறை வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.