Published:Updated:

`மனித நேயத்தை உறுதிபடுத்துங்கள்!'- ரோஹிங்யா தம்பதியைக் காப்பாற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்றம்

நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ரோஹிங்யா அகதிகள் தொடுத்திருந்த வழக்கில் அதற்குத் தடைவிதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா உயர்நீதிமன்றம்

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் உள்ள சிறுபான்மை இஸ்லாமிய ரோஹிங்யா இனக்குழு மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் கடும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ரோஹிங்யா மக்கள் மியான்மரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

மியான்மரில் ரோஹிங்யா மக்கள் சந்தித்த இனப்படுகொலை தொடர்பான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்களில் 40,000 க்கும் அதிகமானோர் இந்தியாவிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

ரோஹிங்யா
ரோஹிங்யா

இவ்வாறு இந்தியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்யா அகதிகளை அவ்வப்போது இந்திய அதிகாரிகள் மியான்மருக்கு நாடு கடத்துவது உண்டு. அதைப்போல அப்துர் சுகுர் மற்றும் அனோவாரா பேகம் என்கிற ரோஹிங்யா தம்பதி மியான்மருக்கு நாடு கடத்தப்படவிருந்தனர்.

இவர்கள் இருவரும் தங்களை நாடு கடத்தக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். தங்களை மியான்மருக்கு நாடு கடத்துவது தங்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு ஒப்பானது. மியான்மர் அரசு ரோஹிங்யா மக்களுக்கு எதிராக நேரடியான இனப்படுகொலையை மேற்கொண்டு வருகிறது என்றும் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

அமித் ஷாவை ஒதுக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமை... ஏன்?

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடிகிறவரை ரோஹிங்யா தம்பதி நாடு கடத்தப்படுவதற்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மனித நேயத்தை உறுதிப்படுத்த தம்பதி நாடு கடத்தப்படுவதைத் தடுக்க தடை விதித்த நீதிபதி சப்யாசாச்சி பட்டாச்சார்யா, ரோஹிங்யா தம்பதிக்கு அரசு ``அடிப்படை வசதிகளோடு கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டும்" எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்தத் தீர்ப்பில் "இந்திய அரசியலமைப்பு, ஐ.நா சட்டங்கள் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகள் மற்றும் எந்தவொரு நாகரிக சமுதாயத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தம்பதி எதிர்கொள்கிற உடனடி அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் நாடுகடத்தப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

ரோஹிங்யா
ரோஹிங்யா

ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த வேண்டும் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் நாடு கடத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் எந்தவித இடைக்காலத் தடையும் விதிக்கவில்லை. ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்தும் அரசின் முடிவில் தலையிட வேண்டாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதேபோல் ஏழு ரோஹிங்யா அகதிகள் நாடு கடத்தப்பட்டு மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது அதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அவசர வழக்கை எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரோஹிங்யா அகதிகளுக்குப் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.