உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். 32 நீதிபதிகள் இருந்ததால், இரண்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களை நிரப்ப, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் கூடி முடிவுசெய்தது.

அதனடிப்படையில், ஆந்திர உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரசாந்தி குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இருவரும் இன்று காலை பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்றம் தன்னுடைய முழு பலத்தை எட்டியது. ஏற்கெனவே நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கே.வி.விஸ்வநாதன் சிவில், கிரிமினல், அரசியலமைப்பு, ரிட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம்கொண்டவர்.

கே.வி.விஸ்வநாதன் 1966-ம் ஆண்டு மே 16-ம் தேதி பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை பொள்ளாச்சி ஆரோக்கிய மாதா மெட்ரிக் பள்ளியில் பயின்றார். அமராவதி நகர் சைனிக் பள்ளியிலும், பின்னர் உதகை சூசையப்பர் பள்ளியிலும் மேற்படிப்பைப் படித்தார். கோவை சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை முடித்தார்.

1988-ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்தார். அதே ஆண்டு தமிழகத்திலிருந்து டெல்லிக்குச் சென்றார். அங்கு தெற்கு டெல்லி, ஆர்.கே.புரம் செக்டார் 1-ல் இருக்கும் மத்திய அரசின் வீட்டு வசதி சங்கத்தில் தன்னுடைய நண்பருடன் ரூ.200 மாத வாடகைக்குத் தங்கி, உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
அந்தப் பகுதியிலிருக்கும் மகாலிங்கம் மெஸ்ஸில் சாப்பிட்டு வந்தார். பின்னர் அவர் முகமதுபூர் கிராமத்துக்கு மாறினார். அங்கு அவர் மேலும் மூன்று பேருடன் சேர்ந்து வசித்துவந்தார். டெல்லியில் மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்ற வேண்டும் என்பதால் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனுடன் பணியாற்றினார்.

பின்னர் அவர் அயோத்தி வழக்கில் ராம்லாலாவுக்காக ஆஜரானார். கே.வி.விஸ்வநாதன் 1988-ம் ஆண்டு முதல் 1990 வரை வைத்தியநாதனிடம் ஜூனியராக இருந்தார். அப்போது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பல வழக்குகளில் ஆஜரானார்.
பின்னர் 1990 முதல் 1995 வரை மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் ஜூனியராகப் பணியாற்றினார். 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பதவியேற்ற விஸ்வநாதன், மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார்.

2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பதவியேற்ற விஸ்வநாதன், மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டார்.
அப்போது, அந்தக் கொலையின் பின்னணியிலுள்ள சதியை விசாரிக்க நீதிபதி எம்.சி.ஜெயின் தலைமையிலான ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை டெல்லி, விக்யான் பவனில் நடந்தது. அப்போது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான மு.கருணாநிதி, வைகோ உள்ளிட்ட பலர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
அ.தி.மு.க சார்பாக விஸ்வநாதன் ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் ஆங்கிலத்தில் தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர். ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழில் பேச ஆரம்பித்தார். இதையடுத்து நீதிபதி ஜெயினுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
பிறகு அவர், "கருணாநிதி சொல்வதை எனக்காக மொழிபெயர்க்க முடியுமா?" எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த விஸ்வநாதன், "நான் அ.தி.மு.க.வு-க்காக வாதாடுகிறேன்" என்றார். பின்னர் நீதிபதி ஜெயின், "விஸ்வநாதன் மொழிபெயர்ப்பதில் யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா?" என்று கேட்டார்.

அதற்கு கருணாநிதி உள்ளிட்ட அனைவரும், `எந்தப் பிரச்னையும் இல்லை’ என பதிலளித்தனர். அதன் பிறகு அவர் நீதிபதிக்காக மொழிபெயர்த்தார். இதையடுத்து நீதிபதி ஜெயின், தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோர் விஸ்வநாதனுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
மிகவும் முக்கியமான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவ `Amicus curiae'வாகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வழக்கமாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்தான், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவார்கள்.

ஆனால், சீனியர் வழக்கறிஞர்களை நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பழக்கம் சில ஆண்டுகளாக இருக்கிறது. இதுவரை தமிழகத்திலிருந்து இரண்டு பேர் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள்.
கடந்த 1951 முதல் 1954-ம் ஆண்டு வரை நீதிபதி எம்.பதஞ்சலி சாஸ்திரி தலைமை நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். 2013-ல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பி.சதாசிவம் சுமார் 9 மாதங்கள் பதவியில் இருந்தார். மூன்றாவதாக, தற்போது கே.வி.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் தொடர்ந்து 2030-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை பதவியில் இருப்பார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவது, தமிழ்நாடு நீதித்துறை வரலாற்றில் இதுவே முதன்முறை.