
அரிபரந்தாமன் (முன்னாள் நீதிபதி)
`இட ஒதுக்கீடு வழங்குவது அடிப்படை உரிமை இல்லை’ என உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாகப் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. நாடாளுமன்றம் அமளிக்காடாகி, வட இந்தியா முழுவதும் பட்டியலின இயக்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
கடந்த 2012-ம் ஆண்டு உத்தரகாண்ட்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்குப் பதவியுயர்வில் இட ஒதுக்கீடு வழங்கத்தேவையில்லை என்று முடிவெடுத்திருந்தது. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு அரசுப்பணிகளில் உரிய முறையில் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. அந்தத் தரவின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் உரிய முறையில் பிரதிநிதித் துவப்படுத்தப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும் அப்போது இருந்த காங்கிரஸ் அரசு எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்குப் பதவியுயர்வில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தியது. தற்போதோ அங்கு பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது.
2012-ம் ஆண்டு உத்தரகாண்ட் அரசு உத்தரவை, உயர்நீதிமன்றம் ரத்துசெய்து பதவியுயர்விலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பா.ஜ.க அரசு உச்சநீதிமன்றம் சென்றது. முந்தைய காங்கிரஸ் அரசின் அதே நிலைப்பாட்டை ஆதரித்து பா.ஜ.க அரசு வாதிட்டது. இப்போது அரசுக்கு ஆதரவாக, இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டமல்ல. மாறாக அரசுப் பணி மற்றும் அரசு அதிகாரங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடாத சமூகங்களுக்கு அதை வழங்குவதற்கான ஒரு கருவியே.
ஆட்சியில் இருந்தபோது இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்த காங்கிரஸ்தான் தற்போது பா.ஜ.க-வை இட ஒதுக்கீட்டிற்கு விரோதி என்கிறது. இட ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பொறுத்தவரையில் பா.ஜ.க - காங்கிரஸ் இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இந்த உத்தரவு இட ஒதுக்கீட்டு உரிமையையே நீர்த்துப்போகச் செய்துவிடும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 341, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சமூகங்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பட்டியல் இனத்தவராக அங்கீகரிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. இதேபோல பிரிவு 342 பழங்குடிகளை அந்தப் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது.
தீண்டாமையை அனுபவித்த சமூகங்கள் இந்தப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்றன. அந்த வரிசையில் 1950-ம் ஆண்டு பட்டியல் சமூகங்கள் மற்றும் பழங்குடிகள் அடங்கிய முதல் தொகுப்பு இந்திய அரசால் வெளியிடப்பட்டது. அப்போதிருந்தே எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு இருந்துவருகிறது.
அதேபோலதான் பிரிவு 340, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைக் கண்டறிந்து அவர்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம் என்கிறது. அவர்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோல் வேறு என்பதால் அதற்கான ஆணையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆணையத்தை நேரு அரசு அமைக்கவில்லை. நேரு அமைச்சரவையில் இருந்து, அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு இது மிகமுக்கிய காரணம்.
இதனைத் தொடர்ந்து 1953-ம் ஆண்டுதான் கலேக்கர் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டவர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை நேரு அரசு நிராகரித்துவிட்டது. அதற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கான வேறு ஆணையம் அமைக்கப்படவேயில்லை.

நெருக்கடிநிலைக்குப் பின், காங்கிரஸ் ஆட்சி நீக்கப்பட்டு, ஜனதா ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோதுதான் மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டவர் ஆணையம் 1979-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்திரா மற்றும் ராஜீவ் ஆட்சிக்காலங்களில் பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி.சிங் பிரதமரான பிறகு அமல்படுத்தினார்.
மண்டல் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பிறகுதான் மத்திய அரசுப்பணிகளிலும் வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. மண்டல் பரிந்துரை அமலுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் அது உரிய முறையில் அமல்படுத்தப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.
ஆனால் இதேசமயத்தில்தான், மத்திய பா.ஜ.க அரசு பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை முன்னேறிய சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் கொண்டுவந்தது. ஏற்கெனவே மத்திய அரசுப்பணிகளில் உயர்சாதியினர்தான் அதிக அளவில் இருக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதற்காகக் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. அவசரகதியில் மூன்றே நாள்களில் இயற்றப்பட்ட சட்டம் இது. இதற்கு காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதாவது, பிற்படுத்தப் பட்டோர்க்கான மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்தவர்கள் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்தனர்.
உயர் சாதியினருக்கு அரசுப்பணிகளில் 10% இட ஒதுக்கீடு அளிப்பதற்கு ஆதரவாக அரசிடம் எந்தத் தரவும் இல்லை. இந்தச் சட்டத்தை எதன் அடிப்படையில் கொண்டு வந்தார்கள் என்பதும் தெரியவில்லை. உச்சநீதிமன்றம் இதற்குத் தடைவிதிக்க மறுத்ததோடு, இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஓர் ஆண்டாகியும் விசாரிக்காமல் ஒத்திவைத்துவருகிறது.
க்ரீமி லேயர் போன்ற அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துதான் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் பரிந்துரையை அமல்படுத்தவே உச்சநீதிமன்றம் அனுமதித்தது. ஆனால் முன்னேறிய சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மௌனம் காத்துவருகிறது. இன்னொருபுறம் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டையும் அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிமன்றத்தின் இத்தகைய போக்கு இட ஒதுக்கீட்டையே நீர்த்துப்போகச் செய்யும். சமூகநீதிக்கான மாபெரும் சவால் இது.