சட்டம் பெண் கையில்!: நிச்சயதார்த்தம் நடந்த பின் திருமணத்தை நிறுத்தினால் சட்டப்படி தண்டிக்கலாமா? - 27

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
இன்றைய காலகட்டத்தில், நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர்கூட சில திருமணங்கள் நிறுத்தப்படுகின்றன. உறவுகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள் முதல் நிச்சயிக்கப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் மனக்கசப்பு வரை இதற்கான காரணங்கள் நீள்கின்றன.
இதுபோன்ற சூழல்களில் அதிக அளவு பாதிப்பை சந்திப்பது பெண் வீட்டினரே. அவர்கள், சட்டரீதியான இழப்பீடு பெறுவதுகுறித்து விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துபவரைக் குற்றவாளியாகக்கொண்டு, அவரை சட்டப்படி தண்டிக்க வழியுண்டா என்று யோசிக்கும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு குழப்பமே மிஞ்சுகிறது. நிச்சயதார்த்தம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கென்று தனிப்பட்ட சட்டம் இல்லை. என்றாலும், தனிப்பட்ட குற்றங்களை அடையாளம்காட்டி வேறு சட்டங்களின்கீழ் இதைக் கொண்டுசெல்ல வாய்ப்புகள் உள்ளன.
நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் ஒரு திருமணத்தை நிறுத்தும்போது, பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண், சமூகக் கேலிக்கு ஆளாவதுடன் மனத்தளவில் பாதிக்கப்படுவார். குறிப்பாக, பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருந்தால், ‘ராசியில்லாதவள்’ என்று முத்திரை குத்தப்படுவார். பொருளாதார பாதிப்பைப் பொறுத்தவரை, இன்றைய காலகட்டத்தில் திருமணத்துக்கு இணையான பிரமாண்டத்துடன், பெரும் பொருள்செலவில் நிச்சயதார்த்த விழாக்கள் நடத்தப்படுகின்றன. உணவு, மண்டபம், பரிசளித்த நகை, போட்டோ, வீடியோ, ஈவன்ட் மேனேஜ்மென்ட் எனப் பணத்தை வாரி இறைக்கிறார்கள். எனவே, திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுக்கும் தரப்பு, செலவழித்த தரப்புக்கு நஷ்டஈடு கொடுப்பதே நியாயமானது. ஆனால், அவர்கள் அதைத் தர மறுக்கும்போது, வீட்டுப் பெரியவர்களைவைத்து நடக்கும் பஞ்சாயத்துகள் முதல் காவல் நிலைய புகார் வரை பிரச்னை செல்கிறது.
இது ஒருபுறமிருக்க, ஒருவேளை திருமணத்தை நிறுத்திய தரப்பு நஷ்ட ஈட்டுத் தொகை கொடுக்க சம்மதித்தாலுமே, அது முழுமையான தீர்வாகாது. பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சுயமதிப்பிழப்புக்கு அத்தொகை ஈடாகாது. எனவே, நிச்சயதார்த்தத்தை நிறுத்திய தரப்பினர் பாதிக்கப்பட்ட தரப்பிடம் சென்று, திருமணத்தை நிறுத்துவதற்கான காரணத்தை விளக்கி, அதனால் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் பின்விளைவுகளுக்கு மன்னிப்பு கேட்டு, நஷ்ட ஈட்டுத்தொகையைக் கொடுத்து விலகுவது, மனக்கசப்புகளையும் இழப்பின் வலியையும் குறைக்க உதவும்.
கைகொடுக்கும் சட்டப் பிரிவுகள்
மேற்சொன்ன சூழல் கைகூடாதபோது, பாதிக்கப்பட்ட தரப்புக்கு சட்டம் உதவுகிறது. இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறும் தரப்பினர், மற்றொரு தரப்புக்கு உண்டான இழப்பீட்டை செலுத்த வேண்டும் என்று இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 பிரிவு 73 மற்றும் 74 ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் என்பது திருமணத்துக்கு முன்பான ஒப்பந்தம் என்பதால், நிச்சயதார்த்தத்துக்குப் பின் அந்த உறவைத் துண்டித்துக்கொள்ள விரும்பும் தரப்பு (ஆண்/பெண்) ஆபரணம் மற்றும் செலவழித்த பணத்தை மற்றொரு தரப்புக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், மேலே சொல்லப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 417 மற்றும் 420-ன் கீழ், ஒருவர் மோசடி குற்றத்தைச் செய்தது நிரூபிக்கப்பட்டால், அபராதமும் ஓர் ஆண்டு சிறை வாசமும் தண்டனையாகக் கிடைக்கும். நிச்சயிக்கப்பட்டவரைக் கைவிடுவதும் ஒருவகையான மோசடிதான் என்பதால், இதனால் பாதிப்படைந்தவர்கள் இந்தப் பிரிவின் கீழும் வழக்கு தொடரலாம். இதுவே கிரிமினல் நம்பிக்கை மோசடிக் குற்றம் என்றால், அதற்கு இந்திய தண்டனைச் சட்டம் 406 பிரிவின் கீழ் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வரை கிடைக்கும்.

உதாரணமாக, டெல்லியைச் சேர்ந்த மணமகனுக்கும் தானேவைச் சேர்ந்த மணமகளுக்கும் அதிக பொருள்செலவில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. மணமகள் வீட்டினர், மணப்பெண்ணைப் பற்றிய உண்மைகளை மறைத்துவிட்டதாகச் சொல்லி மணமகன் வீட்டினர் திருமணத்தை நிறுத்திவிட்டனர். பெண் வீட்டார், பையன் வீட்டார்மீது மோசடிப் புகார் அளித்தனர். நீதிமன்றம், பையன் வீட்டார் இதற்கான இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
வரதட்சணையைக் காரணம் காட்டி திருமணம் நிறுத்தப்பட்டால்..?
நிச்சயத்துக்குப் பின்னர், மணமகன் தரப்பு எதிர்பார்த்த வரதட்சணைத் தொகையைப் பெண் வீட்டார் தரத் தவறினால் அல்லது அதைவிட அதிகமாக இன்னொருவர் வரதட்சணை கொடுக்க முன்வந்து, அதன் காரணமாக மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தினால், சட்டத்தின் முன் அவர்கள் குற்றவாளிகள் ஆகிறார்கள். வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-ல் உள்ள பிரிவு 3 மற்றும் 4, வரதட்சணை வாங்குபவருக்கும் கொடுப்பவருக்குமான அபராதம் மற்றும் வரதட்சணையை (demand) கட்டாயப்படுத்துபவருக்கான அபராதம் பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே, வரதட்சணை காரணமாக திருமணம் நிறுத்தப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் சட்டத்தின்படி வழக்குத் தொடரலாம். ஆனால், காவல் நிலையம், நீதிமன்றம் என்று சென்றால் பெண்ணுக்கு பாதிப்பு அதிகமாகும் என எண்ணி விலகிவிடுகிறார்கள் பலர். இந்த எண்ணத்தை மாற்றி, செலவழித்த தொகையை திரும்ப வாங்கவும், எதிர்த்தரப்புக்கு பாடம் புகட்டவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர் பவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
திருமணத்துக்கு முன்பே பாலியல் உறவு
நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் ஒருவேளை திருமணத்துக்கு முன்பே பாலியல் உறவில் ஈடுபடும்போது, திருமணம் நின்றுபோகும் சூழலில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். திருமணத்தை நிறுத்திய தங்கள் வீட்டினரிடம் இதுபற்றிச் சொல்ல முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒருவேளை திருமணத்தை நிறுத்தியதில் மணமகனின் பங்கும் சம்மதமும் இருக்கும்பட்சத்தில், மணமகள் இதை வெளியே சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் அவன் தைரியமாகவே இருப்பான். ஆனாலும், தன்னை ஏமாற்றிய ஆணுக்குத் தண்டனை பெற்றுத் தரத் துணியும் பெண்கள், இதை சட்டரீதியாக எதிர்கொள்ளும்போது, அது பாலியல் வன்புணர்வுக் குற்றமாகக் கையாளப்படுகிறது.
நம்பவைத்துக் கைவிடுவது கொடுங்குற்றமே!
கடந்த ஏப்ரல் மாதம் (CRIMINAL APPEAL NO. 629 OF 2019) உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, இங்கு குறிப்பிடப்படவேண்டியது. `திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்துவிட்டு மறுத்தால், அது என்ன பெரிய கொலைக்குற்றமா, அதற்குத் தண்டனை கிடைத்ததாக வரலாறு இல்லையே’ என்று மெத்தனமாகத் தவறு செய்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தீர்ப்பு இது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் காதலியிடம் அவரைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி நம்பவைத்து, அவர் மறுத்தும் அவரை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி சம்மதிக்கவைத்துள்ளார். பின்னர், இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு, தனது வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார். அந்தப் பெண், திருமணத்துக்கு வற்புறுத்தியபோதெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் தட்டிக்கழித்துள்ளார். இறுதியாக அந்தப் பெண் தன் பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவிக்க, இவர்களின் காதலை ஏற்கெனவே அறிந்திருந்த பெற்றோர், திருமணம் தொடர்பாகப் பேச மருத்துவரின் வீட்டினரை அணுகினர்.
அப்போதுதான், மருத்துவர் வேறொரு பெண்ணை மணந்துள்ளது அவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்மீது அந்தப் பெண் புகார் அளித்தார். நீதிமன்ற விசாரணையில், மருத்துவருக்கு அபராதமும் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தீர்ப்பானது.
மருத்துவர், உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். அங்கும் அவரது தண்டனை உறுதிசெய்யப்பட்டது. மருத்துவர், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். ‘ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்துப் பாலியல் உறவில் ஈடுபட்ட பிறகு அவளைக் கைவிட்டது, பாலியல் வன்புணர்வுக் குற்றமாகும். இது வெறுக்கக்கூடிய குற்றம். இது ஒரு பெண்ணின் மரியாதையைக் களங்கப்படுத்துவதாகும். அதுமட்டுமல்ல, இது கொலைக் குற்றத்துக்கு ஈடானது’ என்று தங்கள் கோபத்தைத் தீர்ப்பில் வெளிப்படுத்தினர் நீதிபதிகள். மருத்துவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த பத்து வருட சிறைத்தண்டனையை ஏழு வருடங்களாகக் குறைத்தது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 சட்டப்பிரிவின் கீழ் மருத்துவருக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
மாறிவரும் கலாசார முறைகளால், நிச்சயதார்த்தத் துக்குப் பிறகு திருமணங்கள் நிறுத்தப்படும் குற்றங் களுக்கு தனிச்சட்டம் கொண்டுவரவேண்டியது காலத்தின் தேவை.