Published:Updated:

`இது, தண்டனையளிப்பதுபோல இருக்கிறது!' - தலைமை நீதிபதியின் இடமாற்றத்தைக் கண்டிக்கும் வழக்கறிஞர்கள்

ர.முகமது இல்யாஸ்

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில்ரமணி பதவி விலகுவதாக அறிவித்ததையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Tahilramani
Tahilramani

கடந்த 2018-ம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், விஜய கமலேஷ் தஹில்ரமணி. இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் இரண்டு பெண்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் தஹில்ரமணியும் ஒருவர்.

இந்தியாவின் அற்புதமான பகுதியான தமிழ்நாட்டில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மாநிலத்தின் மொழியையும் பண்பாட்டையும் வளர்த்தெடுத்த ஆளுமைகளைத் தமிழ்நாட்டின் பலமாகக் கருதுகிறேன்.
தஹில்ரமணி, 2018-ம் ஆண்டு தலைமை நீதிபதியாகப் பதவியேற்றபோது கூறியது.
Tahilramani
Tahilramani

அப்போதைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தஹில்ரமணி, மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து விலகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றார்.

தஹில்ரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓர் ஆண்டு முடியும் நிலையில், தற்போது அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய நீதித்துறையின் கொலிஜியம் பரிந்துரையின்படி, மேகாலயா நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டல், சென்னைக்கு மாற்றப்படுகிறார்.

சென்னை உயர் நீதிமன்றம் 75 நீதிபதிகளைக் கொண்டது. இந்தியாவின் பழைமையான, மிகப்பெரிய நீதிமன்றங்களுள் ஒன்று. மேகாலயா நீதிமன்றம், இந்தியாவின் மிகச்சிறிய நீதிமன்றம்; 3 நீதிபதிகளைக்கொண்ட இது, 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சென்னை நீதிமன்றத்திற்கும் மேகாலயா நீதிமன்றத்திற்கும் இடையிலான வேறுபாடுகளால் கொலிஜியம் செய்துள்ள பரிந்துரை, தஹில்ரமணியைச் சிறுமைப்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கொலிஜியம் தன் முடிவை மாற்ற வேண்டும் என தஹில்ரமணி விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

நீதிபதி தஹில்ரமணி, பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளைச் சந்தித்துள்ளார். 2002-ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த படுகொலைகளில், பில்கீஸ் பானோ என்கிற பெண், கலவரக்காரர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவரது குடும்பமும் கொல்லப்பட்டது. இந்த வழக்கு, குஜராத்தில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

`எந்த சுயநலத்துக்கும் அவர் இடம் கொடுத்ததில்லை!'-தலைமை நீதிபதி ராஜினாமா முடிவு குறித்து வழக்கறிஞர்கள்

2017-ம் ஆண்டு, பில்கீஸ் பானோ வழக்கில் தீர்ப்பளித்த தஹில்ரமணி தலைமையிலான அமர்வு, 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. மேலும், வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை அதிகாரிகள், மருத்துவ உதவி செய்யாத மருத்துவர்கள் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.  

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தனது இடமாற்றத்தை எதிர்த்துப் பதவி விலகுவதைக் கண்டித்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், செப்டம்பர் 09 அன்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

NGR Prasad
NGR Prasad

இதுதொடர்பாக, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். "தலைமை நீதிபதி தஹில்ரமணி பதவி விலகுவதாக அளித்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. பெரிய நீதிமன்றம் ஒன்றிலிருந்து சிறிய நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருப்பதை அவமானமாகக் கருதி, அவர் அந்த முடிவை எடுத்திருக்கலாம். இடமாற்றம் செய்வதற்குக் காரணம், நிர்வாக நலனுக்காக என கொலிஜியம் கூறுகிறது. நிர்வாக நலனுக்காக எப்படி 75 நீதிபதிகளுக்குத் தலைமைதாங்கியவரை, 3 நீதிபதிகளுக்குத் தலைமைதாங்கச் சொல்ல முடியும்? இது தண்டனை தருவது போலிருக்கிறது. வழக்கறிஞர்களின் போராட்டம் நியாயமானது. அதனால், அந்தப் போராட்டத்தை நானும் ஆதரிக்கிறேன்" என்று கூறினார்.

நிர்வாக நலனுக்காக எப்படி 75 நீதிபதிகளுக்குத் தலைமை தாங்கியவரை, 3 நீதிபதிகளுக்குத் தலைமைதாங்கச் சொல்ல முடியும்? இது தண்டனை தருவது போலிருக்கிறது.
மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்
`நான் இந்த அமைப்பின் அங்கம் கிடையாது!’ - ராஜினாமா முடிவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி?

தலைமை நீதிபதி தஹில்ரமணி உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படாமல் இருந்திருந்தால், 2020-ம் ஆண்டின் அக்டோபர் மாதம்வரை பணியில் இருந்து, அதன்பிறகு ஓய்வுபெற்றிருப்பார். நாட்டின் மிக முக்கியமான நீதிமன்றம் ஒன்றின் தலைமை நீதிபதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளது, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.