மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 16 பேரின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுமீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மகாராஷ்டிராவில் ஆளுநராக இருந்த கொஷாரியா செய்த தவறு காரணமாகவே ஏக்நாத் ஷிண்டே முதல்வராக நேரிட்டதாகவும், 16 எம்.எல்.ஏ-க்களின் பதவிப் பறிப்பு தொடர்பாக சபாநாயகர் இறுதிமுடிவு எடுக்கலாம் என்றும், இதில் சபாநாயகரின் பங்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் வேறு அமர்வு முடிவுசெய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. அதேசமயம் ஏக்நாத் ஷிண்டே அரசும் தப்பித்துக்கொண்டது. தங்களது அரசை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேயின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உத்தவ் தாக்கரே தனது பதவியைத் தானாக ராஜினாமா செய்ததால் அதைத் தங்களால் ரத்துசெய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் உத்தவ் தாக்கரே, ``நாம் அனைவரும் தேர்தலைச் சந்திப்போம். மக்கள் இறுதி முடிவு எடுக்கட்டும். நான் ராஜினாமா செய்துவிட்டேன். ராஜினாமா செய்ததில் எனக்கு மகிழ்ச்சியே. ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது. எனவே, ஷிண்டே தார்மீக பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 16 எம்.எல்.ஏ-க்களின் பதவிப் பறிப்பு தொடர்பாக சபாநாயகர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இறுதி முடிவு எடுக்க் வேண்டும். அப்படி எடுக்கவில்லையெனில் நாங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்வோம். சபாநாயகர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் இது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

உலகம் முழுவதும் மகாராஷ்டிராவின் பெயர் இழுக்கப்படுகிறது. அதை பிரதமர் நரேந்திர மோடி நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கருத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னாள் ஆளுநர் கொஷாரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இது போன்ற சட்டவிரோத காரியங்களை எதிர்காலத்தில் யாரும் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேயிடம் இருக்கும் கவுன்சிலர், கட்சி நிர்வாகிகள் தங்களிடம் வர வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்திருக்கிறார்.