அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கச்சநத்தம் தீர்ப்பு... “காயமும் ஆறவில்லை... அச்சமும் அகலவில்லை...!”

கச்சநத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
கச்சநத்தம்

குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்த பின்புதான் சாட்சிகள் அச்சமில்லாமல் சாட்சி சொல்ல வந்தார்கள்

தமிழ்நாட்டைப் பதறவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் மூன்று பெண்கள் உட்பட 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது சிவகங்கை நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்தத் தீர்ப்பு சிறு ஆறுதலைக் கொடுத்தாலும், இன்னும் அச்சத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் கச்சநத்தம் கிராமத்தினர்.

2018-ம் ஆண்டு, மே 28-ம் தேதி இரவு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 40 குடும்பங்கள் வசிக்கும் கச்சநத்தத்தில் கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த கும்பல் ஒன்று பெருங்கூட்டமாக ஊருக்குள் நுழைந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் இரு இளைஞர்களும், முதியவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த இன்னொருவர் ஒன்றரை வருடம் கழித்து மரணமடைந்தார்.

கச்சநத்தம் தீர்ப்பு...  “காயமும் ஆறவில்லை... அச்சமும் அகலவில்லை...!”

இது குறித்தான வழக்கு, சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணையும் கூட, அமைதியாக நடந்ததாகச் சொல்ல முடியாது. ஜாமீனில் விடவில்லை என்பதற்காக ஒரு குற்றவாளி நீதிமன்றத்திலேயே கழுத்தை அறுத்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி, சாட்சியை நேரடியாக மிரட்டினார். நீதிமன்றத்துக்குள் குற்றவாளிகள் தங்களுக்குள் தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவங்களுக்கும் தனித்தனியாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பளிப்பதற்கு முன்பு நீதிமன்றத்தை அவமதிக்கும்விதமாக ஒருவர், நீதிபதிக்குக் கடிதம் அனுப்பிய கூத்தும் நடந்தது.

கச்சநத்தம் தீர்ப்பு...  “காயமும் ஆறவில்லை... அச்சமும் அகலவில்லை...!”

பதற்றம் காரணமாக தீர்ப்பு நாளன்றுகூட, குற்றவாளிகளில் ஒருவர் மட்டுமே நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். மற்ற அனைவரும், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமே ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பெண்கள் உட்பட குற்றவாளிகள் 27 பேருக்கும் தலா 7 ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறிய நீதிபதி, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளைச் செய்த வழக்கறிஞர் பகத்சிங் நம்மிடம், “குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்த பின்புதான் சாட்சிகள் அச்சமில்லாமல் சாட்சி சொல்ல வந்தார்கள். இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது சாதிரீதியான வன்முறைகள் ஒழிய வேண்டும்’’ என்றார்.

பிச்சையம்மாள்
பிச்சையம்மாள்

நாம் கச்சநத்தத்துக்கு நேரில் சென்றபோது ஊரைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீர்ப்பு குறித்து கருத்துக் கூற ஊர் மக்கள் தயங்கினார்கள். ஒரு சிலர் மட்டும், “காயமும் ஆறலை... அச்சமும் அகலலை... நடந்த கொடூரத்துக்கு அதிகமான தண்டனை எதிர்பார்த்தோம். பரவாயில்லை... இந்தத் தீர்ப்பாவது வந்ததே” என்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பிச்சையம்மாள், “அன்னிக்கு நடந்ததை இன்னும் மறக்க முடியலை. என் வீட்டுக்காரருக்கு ஒரு விரல் போயிடுச்சு. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலை. மறுபடியும் இந்த மாதிரி நடக்காம அரசாங்கம்தான் பார்த்துக்கணும்” என்றார் கை கூப்பியபடி.

அமைதியும் சமத்துவமும் ஓங்கட்டும்!