Published:Updated:

`ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது!' - புதுச்சேரி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி

கிரண்பேடி - நாராயணசாமி
கிரண்பேடி - நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையேயான அதிகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அவருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் அதிகார மோதல் தொடர்ந்து வருகின்றது. துறை அமைச்சர்களுக்கே தெரியாமல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவது, தன்னிச்சையாக அவர்களுக்கு உத்தரவு போடுவது, அரசுத் துறைகள் மற்றும் தொகுதிகளுக்குச் சென்று ஆய்வுகள் நடத்துவது போன்ற கிரண்பேடியின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், முதல்வர் நாராயணசாமியின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணன் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அந்த மனு மீதான விசாரணையை அடுத்து, ``அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படிதான் யூனியன் பிரதேச நிர்வாகியான துணைநிலை ஆளுநர் செயல்பட முடியுமே தவிர, அவருக்கென்று பிரத்யேகமான சிறப்பு அதிகாரங்கள் எதுவுமில்லை.

சட்டப்பேரவையைத் தாண்டிய உயர்ந்த அதிகாரம் எதுவும் இல்லை” என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ``சட்டப்பேரவையின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பீடு செய்தும், ஆளுநரின் அதிகாரத்தை உயர்த்தி அவருக்கு சிறப்பு அதிகாரம் அளித்து, 2017-ல் மத்திய அரசு வெளியிட்ட 2 உத்தரவுகளும் செல்லாது” என்று அதிரடியாகத் தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி மகாதேவன்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

அந்தத் தீர்ப்பை எதிர்த்தும், அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தை அணுகியது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கிரண்பேடி தரப்பு. ஆனால், அந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ``இந்த வழக்கு மேல்முறையீடாக உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு வந்தது தவறு. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை தர இயலாது. மனுதாரர்களுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம். இவ்விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என்று குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அதையடுத்து, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சார்பிலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ``புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் துணைநிலை ஆளுநருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அதன் மீது விரைவான முடிவுகள் எடுக்கப்பட மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அது ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் அதன் பாதிப்பு மக்களைத்தான் சென்றடையும். மேலும் கூட்டாட்சி தத்துவத்தின்படி துணைநிலை ஆளுநரும் புதுச்சேரி அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துக்காக முதல்வர் நாராயணசாமியை தொடர்புகொண்டபோது, ``தீர்ப்பை முழுவதுமாக படித்துவிட்டுக் கூறுகிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு