Published:Updated:

`உங்க மருமகளை வரவேற்க இன்னொரு மகளைக் கொல்வதா?’ - ஜெயகோபாலை கடிந்துகொண்ட நீதிபதி

`பேனர் வைத்தது தவறுதான்' என ஜெயகோபால் ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஜெயகோபால்
ஜெயகோபால்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், இன்ஜினீயர் சுபஸ்ரீ பைக்கில் சென்றார். அப்போது, சாலையின் தடுப்புச் சுவரில் கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவின் பேனர், சுபஸ்ரீ பைக்கின் மீது விழுந்தது. இதனால் நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சுபஸ்ரீ சிக்கினார். உயிருக்குப்போராடிய அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றனர்.

சுபஸ்ரீ
சுபஸ்ரீ

அங்கு அவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் லாரி டிரைவர், பேனரை வைத்த அ.தி.மு.க பிரமுகர் பள்ளிக்கரணை ஜெயகோபால் ஆகியோர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, ஜெயகோபால் தலைமறைவானர். தேடுதல் வேட்டையைத்தொடர்ந்த காவல்துறை ஜெயகோபாலைக் கைது செய்தது. இந்நிலையில், ஜாமீன் வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயகோபால் மனுத் தாக்கல் செய்தார்.

வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை
ஜெயகோபால்

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ``எனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறிதான் பேனர் வைத்தேன். வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மனுவை விசாரித்த நீதிபதி, ``உங்கள் மருமகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்றுள்ளீர்கள்” என்று கடிந்துகொண்டதோடு, ``ஏன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தீர்கள்” என ஜெயகோபால் தரப்பிற்குக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயகோபால் தரப்பில், ``சுபஸ்ரீ விபத்து நடந்தபிறகு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்” என பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

"நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது!" - பேனர் விவகாரம் குறித்து சுபஸ்ரீ பெற்றோர் குமுறல்