Published:Updated:

`நான் இந்த அமைப்பின் அங்கம் கிடையாது!’ - ராஜினாமா முடிவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி?

சத்யா கோபாலன்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவுள்ள தஹில் ரமணி தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tahilramani
Tahilramani

உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவிலிருந்த நீதிபதிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அந்தக் காலி இடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என கடந்த வருடம் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தது உச்சநீதிமன்ற கொலீஜியம். ஆனால், தாங்கள் வைத்த கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து நிராகரித்து வருவதாக மத்திய அரசு மீது நீதிபதிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே சிறு உரசல் நிலவியது. கடந்த வருடம் இந்த சர்ச்சை மிகப் பெரியதாகப் பார்க்கப்பட்டது.

Supreme court
Supreme court

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தொடர் அழுத்தத்தினால் ஒரு வழியாக புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா, உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த கே.எம் ஜோசப் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் முன்னதாக இருந்த மாநில நீதிமன்றங்களுக்கு வேறு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அப்படி கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் தான் தஹில் ரமணி. இதற்கு முன்னர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு நீதிபதியாக பணியாற்றி வந்தவருக்கு பதவி உயர்வு அளித்து சென்னைக்கு மாற்றப்பட்டார். தஹில் ரமணி சென்னை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையில், தற்போது சென்னைக்கு வேறு தலைமை நீதிபதியை நியமிக்க முடிவு செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய கொலீஜியம் குழு கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

Chennai high court
Chennai high court

அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கும், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த இட மாற்றத்தை நீதிபதி தஹில் ரமணி ஏற்க மறுத்து கொலீஜியத்துக்கு கோரிக்கை வைத்திருந்ததாகவும் ஆனால் அதை கொலீஜியம் நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vikatan

இதனால் தன் நீதிபதி தஹில் ரமணி பதவி விலக இருப்பதாகவும் இந்த விஷயம் தொடர்பாக தன் நெருங்கிய நண்பர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ``நான் இந்த அமைப்பின் அங்கம் கிடையாது. விரைவில் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை நீதிபதிக்கு எனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tahilramani
Tahilramani

இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற பெண் தலைமை நீதிபதிகளில் தஹில் ரமணியும் ஒருவர். இவரின் இடமாற்றத்துக்கான காரணம், தஹில் ரமணி அதை ஏற்க மறுத்ததற்காகக் காரணம் போன்ற எந்த முழுமையான தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. மேகாலயா உயர்நீதிமன்றம் மிகவும் சிறியது, அங்கு மொத்தம் மூன்று நீதிபதிகள் மட்டுமே பணி செய்துவருகின்றனர். தஹில் ரமணி, இட மாற்றத்தை ஏற்க மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.