Published:Updated:

`ரூ.5 லட்சம் நிவாரணம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை!'- சுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் காட்டம்

கலிலுல்லா.ச

``18 ஆண்டுகளாக காவல்துறைபணியில் இருக்கும் ஆய்வாளருக்கு ஒரு வழக்கை பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியென தெரிகிறதா?. ஒரு கிரிமினல் குற்றம் நடைபெற்றுள்ளது. அவர் தந்தை வரும் வரை காத்திருந்துதான் வழக்கு பதிய வேண்டுமா?''

madras hc
madras hc

சட்டவிரோத பேனர் தொடர்பான வழக்கில், பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை உதவி ஆய்வாளர் சவுரிநாதன் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், ``நேற்றைய சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காது. திருமண பேனர், பிறந்தநாள் விழா பேனர், காது குத்து பேனர், வயதுக்கு வந்தால் பேனர், கடா வெட்டுனா பேனர், விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் இல்லை.

Subasri
Subasri

அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவது போதாது, நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் யாராவது இறந்தால்தான் ஏதாவது முன்னெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் உயிர்ப்பலி தேவைப்படுகிறது” என்று தெரிவித்த நீதிபதிகள், ``பொது இடத்தில் மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியான பெண்ணின் தந்தைதான் புகார் அளிக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தினீர்கள்?” என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ``விபத்து 2:30 மணிக்கு நடந்துள்ளது. 3 மணிக்கு தந்தையிடம் புகார் வாங்கியுள்ளீர்கள். ஆனால், வழக்கு 6 மணிக்குத்தான் பதிவாகியுள்ளது. 18 ஆண்டுகளாக காவல்துறைபணியில் இருக்கும் ஆய்வாளருக்கு ஒரு வழக்கை பதிவு செய்ய இவ்வளவு நேரம் எடுத்தது சரியென தெரிகிறதா?.

ஒரு கிரிமினல் குற்றம் நடைபெற்றுள்ளது. அவர் தந்தை வரும் வரை காத்திருந்துதான் வழக்கு பதிய வேண்டுமா? கிரிமினல் குற்றத்திற்கு குடும்ப நபர்கள் இல்லாமலே வழக்கு பதியலாம் எனக் காவல்துறைக்கு தெரியாதா ” என்ற நீதிபதியின் கேள்விக்கு, `4:30 மணிக்குதான் காவல்நிலையத்துக்குத் தகவல் வந்தது’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.

banner
banner

தொடர்ந்து நீதிபதிகள், ``இறந்தவருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப் போகிறீர்கள். நஷ்ட ஈடு கொடுத்துவிட்ட அந்த தொகையை விதிகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் பேனர் வைத்தவரிடம் வசூலித்துக் கொள்ளுங்கள். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். உத்தரவு முறையாகச் செயல்படுகிறதா என்பதை தலைமைச் செயலாளர் கண்காணிக்க வேண்டும்” என்று கூறி, வழக்கை நீதிபதிகள் 19-ம் தேதி ஒத்திவைத்தனர்.