Published:Updated:

`ஜெயகோபாலை எப்போது கைது செய்வீர்கள்?'- சுபஸ்ரீ வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக நீதிபதிகள் காட்டம்

`ஜெயகோபாலை எப்போது கைது செய்வீர்கள், நாங்களே நேரடியாக சாலையில் இறங்கி சட்டவிரோத பேனரை அகற்றுவதைத் தவிர அனைத்தையும் செய்துவிட்டோம்’

madras hc
madras hc

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க வழக்கறிஞர் வில்சன், ``சம்பவம் நடந்து 12 நாள்கள் ஆகியும், பேனர் வைத்த ஜெயகோபால் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும்” என்றார். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், ``மாநகராட்சி தரப்பில், விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

அரசு தலைமைக் கூடுதல் வழக்கறிஞர் எமிலியஸ், ``காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயகோபாலை விரைவில் கைது செய்வோம். அவரைப் பிடிக்க பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இதைக் கேட்டறிந்த நீதிபதிகள், ``மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை யார் கண்காணிக்கிறார்கள்? அ.தி.மு.க தரப்பிலிருந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்றனர்.

subashri
subashri

விபத்து நடந்தபோது, தண்ணீர் லாரியில் தண்ணீர் இருந்ததா. காவல்துறை தரப்பில் என்ன மாதிரியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், `ஜெயகோபாலை எப்போது பிடிப்பீர்கள், நாங்களே நேரடியாக சாலையில் இறங்கி சட்டவிரோத பேனரை அகற்றுவதைத் தவிர அனைத்தையும் செய்துவிட்டோம்’ என்று வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து பிரின்டர் அசோசியேஷனிடம், ``சாலையில் வைக்கப்படும் பேனர்களில் பிரின்டர் பெயர்கள் வைக்கப்படுகிறதா.. அதை நீங்கள் பின்பற்றினீர்களா, கல்யாணத்துக்கு பஸ் ஸ்டாண்ட்களில் ஏன் பேனர் வைக்கப்படுகிறது? 100 அடி பேனர் வைக்க அனுமதி இல்லாதபோது நீங்க ஏன் பிரின்ட் செய்கிறீர்கள்.?” என்று கேள்வி எழுப்பினர்.

`வாங்கிய ரூ.3 லட்சத்தைத் தருகிறேன், வாங்க!'‍‍ - பிரசாதத்தில் விஷம் வைத்து சென்னை பேராசிரியர் கொலை

அதற்கு பிரின்டர் அசோசியேஷன் தரப்பில், ``இங்கிருக்கும் எம்.பி ஒருவர், அசாம் மாநிலத்துக்கு அனுப்ப இங்கே பேனரை அச்சடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அச்சடிக்கும்போது, சாலைகளில் வைக்கமாட்டோம் என்று உறுதியளிக்கின்றனர். பின்னர், அந்த உறுதியை அவர்கள் பின்பற்றுவதில்லை. கத்தியால் கொலைகள் நடக்கிறது என்பதால், கத்தியை தயாரிக்காமல் இருக்கமுடியுமா?

banner
banner

யாரோ செய்யும் தவறுக்கு பிரின்டர்கள் என்ன செய்வார்கள்” என்று பதிலளித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் ``சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகும் நீங்கள் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் மட்டுமே கேட்கிறீர்கள். நாங்கள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் எண்ணம் உங்களுக்கு இல்லை. இந்த பிரச்னையைத் தீர்க்க, பேனர் தொடர்பான அனைத்து சட்டங்களையும் அழிப்பதே ஒரே வழி. பேனர் வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.