Published:Updated:

`வரிப்பணத்தில் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன?' - நீதிபதிகள் கேள்வி

கலிலுல்லா.ச

``ஜெயலலிதா இல்லத்தை மக்கள் பணத்தில் நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன?” என்று நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜெயலலிதா
ஜெயலலிதா ( அதிமுக )

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவிற்கு 913 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் இல்லாததால், உயர்நீதிமன்றம் நிர்வாகியை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஏற்கெனவே, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், 1990-91 முதல் 2011-12 வரையிலான நிதியாண்டுகளில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய செல்வ வரி (Wealth Tax) 10 கோடியே 12 லட்சத்து ஆயிரத்து 407 ரூபாய் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், வரி பாக்கிகளுக்காக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் எல்ல ரெட்டி குடா ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் உள்ள சொத்து, சென்னை மந்தவெளி புனித மேரி சாலையில் உள்ள சொத்து என நான்கு சொத்துகள் 2007, 2013 போன்ற ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள்கூட தினமும் தங்கள் பேச்சை தொடங்கும்போதே, ஜெயலலிதாவை புகழ்ந்துதானே பேசத் தொடங்குகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றம்
தீபா
தீபா

அப்போது மனுதாரர்கள் தரப்பில், 1000 கோடி வரையிலான ஜெயலலிதாவின் சொத்துகள் தனி நபர் ஒருவர் நிர்வகிக்க கேட்க முடியாது என்பதால், தீபக் தீபா ஆகியோரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர்கள், ``அரசு நினைவிடமாக வேதா நிலையத்தை மாற்ற ஆட்சேபிக்கிறோம். எங்கள் ஆட்சேபனையை மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளோம். நகரின் மையப்பகுதியில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை வெறும் 35 கோடிக்கு எடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. 100 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட இடம்” என்றனர்.

தீபக்
தீபக்

இதற்கு நீதிபதிகள்,``அவரின் பெயரை நிலைக்கச் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றதே. அமைச்சர்கள்கூட தினமும் தங்கள் பேச்சை தொடங்கும்போதே, ஜெயலலிதாவை புகழ்ந்துதானே பேசத் தொடங்குகிறார்கள். ஜெயலலிதா இல்லத்தை மக்கள் பணத்தில் நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன” என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.