தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில், கடந்த ஜனவரி 29-ம் தேதி, தமிழக அரசு 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, ``தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இதுபோல ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை, இது ஜனநாயகத்துக்கு எதிரானது" என்று கூறி தமிழக அரசின் பணியிடமாற்ற உத்தரவை உடனடியாக ரத்துசெய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென்று தொடுக்கப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மேலும், அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்ட இந்த வழக்கு, பொதுநல வழக்கு அல்ல, தனிநபர்நல வழக்கு. எனவே, அபராதத்துடன் வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. அதையடுத்து, அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கை வாபஸ் பெற்றார்.
