கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்ககையை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. இதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின், `மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடை வழங்க வேண்டும்’ என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவோர், 80-G-ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இலங்கைக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்வதாக தமிழக அரசாணை வெளியிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து ஜெய்சங்கர் என்பவர், ``இந்திய உணவுக் கழகம் 1 கிலோ அரிசியை ரூ.20-க்கு வழங்கும் நிலையில், தமிழக அரசு 1 கிலோ அரிசியை ரூ.33.50 என ரூ.13.50 கூடுதலாக வாங்குவதால் அரசுக்கு இழப்பு தான் ஏற்படுகிறது. இதே அரிசியை தமிழக அரசு இந்திய உணவுக் கழகத்திடம் வாங்கினால் ரூ.54 கோடி சேமிக்க முடியும். எனவே இதிலுள்ள மோசடி மீது விசாரணை நடத்தி, அரிசியை கூடுதல் விலைக்கு வாங்கும் அரசாணை மீது தடைவிதிக்க வேண்டும்" என உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர், `மத்திய அரசின் ஒப்புதலோடு தான் இலங்கைக்கு அரிசி அனுப்பப்படுகிறது. மேலும், பேரிடர் போன்ற காலங்களில் டெண்டர் நடைமுறைகளை பின்பற்றாமல் அரிசி கொள்முதல் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது' என விளக்கமளித்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில், தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.