Published:Updated:

கொரோனா: `சித்த மருத்துவம் பயன்படுத்த அரசுக்கு என்ன தயக்கம்?’ -நீதிமன்றம் கேள்வி

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

'சித்த மருத்துவத்தின் புதிய மருந்துகளைப் பரிசோதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்கவும் உத்தரவு.

கொரோனா தொற்றினைப் பற்றிய முழுவிவர அறிக்கையைக் கடந்த ஜூன் 7-ல் வெளியிட்ட தமிழக அரசு, அடுத்த அறிக்கையை ஜூன் 20-ல் வெளியிட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன. பல இடங்களிலும் கொரோனா தொற்று வீரியமாகப் பரவிவருகிறது.

corona virus
corona virus

இந்நிலையில், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை அளித்தார். அதில், "கொரோனோவைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் கொண்டு கசாய பொடி மருந்தைக் கண்டுபிடித்துள்ளேன். இந்தப் பவுடரை தண்ணீரில் கொதிக்கவைத்து, தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்துவந்தால், கொரோனா நோயிலிருந்து விடுபடலாம். இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது. மேலும், நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும். சீனாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே உதவியது.

எனவே, பொடி மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே, கொரோனா நோயைக் குணப்படுத்தும் சித்த மருந்தான மூலிகைப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபகள், "கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கஷாயம் எதன் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டன. மேலும், கபசுரக் குடிநீர் கொரோனா தொற்றுக்கு கொடுக்கலாம் என ஆய்வு செய்யப்பட்டதா?

hc madurai
hc madurai

கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது? மருத்துவ காப்பீட்டுத் தொகையாக 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும்போது, இது போன்ற புதிய மருந்துகளைப் பரிசோதிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?” என கேள்வி கேட்ட நீதிபதிகள், `ஆங்கில மருத்துவ வியாபார யுக்தி மற்றும் லாப நோக்கு, இயற்கை மருத்துவத்தை அழித்துவிடுமோ என அச்சம் உள்ளது” என தெரிவித்தனர். மேலும் வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை (23.6.2020) நாளை ஒத்திவைத்தனர்.

இதுகுறித்து மக்கள் மன்றத் தலைவர் ராஜ்குமார், "கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தைப் பாதிக்கும் முன்பே சித்த மருத்துவத்தை மக்கள் மன்றம் பரிந்துரைசெய்தது. ஆனால், தொடர்ந்து எங்களுடைய கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளது. தற்போது, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடுமையாகப் பாதித்து, இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையைக் கருதியாவது தமிழக அரசு சித்த மருத்துவத்தையும் கையில் எடுக்க வேண்டும். முழுமையாக சித்த மருத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை.

சித்த மருத்துவத்திற்கு ஆதரவாக போராட்டம்
சித்த மருத்துவத்திற்கு ஆதரவாக போராட்டம்

ஆனால், சித்த மருத்துவமும் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்தால்தான் விரைவாகக் கட்டுப்படுத்த முடியும். இதற்காக தொடர்ந்து இணையவழி போராட்டங்களை நடத்திவருகிறோம். எனவே, கொரோனா பாதிப்பில் சித்த மருத்துவர்களின் ஆலோசனையையும் கையாள வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு