Published:Updated:

சாத்தான்குளம்: `நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி அளித்துள்ளது!’ - உயர் நீதிமன்றம்

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி அளித்துள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

``சாத்தான்குளம் வழக்கின் முக்கிய சாட்சியான பெண் தலைமை காவலருக்கு முழு சம்பளத்துடன்கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளத்தில் இந்த வழக்கு விசாரணையைக் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வருகிறார். அவருக்குத் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் ஒத்துழைக்க மறுத்ததாகவும், `உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்று காவலர் மகாராஜன் இழிவுபடுத்தி பேசியதாகவும், மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சாத்தான்குளம்:`பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைக்கணும்!'- பெண் தலைமைக் காவலர் #VikatanExculsive

இதையடுத்து, மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டு, பின்பு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், மூவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளிடம் மாஜிஸ்திரேட்டிடம் நடந்துகொண்ட விதத்துக்காகக் காவல்துறை தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டது.

வழக்கு விசாரணை, சி.பி.ஐ-க்கு மாறும்வரை தற்காலிகமாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. உத்தரவிட்ட சில மணி நேரத்திலேயே சி.பி.சி.ஐ.டி, தனது விசாரணையைத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அனில்குமார், ஏ.டி ஜி.பி தாமரைக்கண்ணன் மற்றும் மனநல நிபுணர்கள் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகினர்.

நீதிமன்றம் வந்த  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள்
நீதிமன்றம் வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள்

பின்னர் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, ஒரு மனிதன் மீதான தாக்குதலுக்கு காரணம், ஏற்கெனவே அவர்மீது மனதில் கோபம் இருந்திருக்கும். அந்த கோபம் அதிகரித்துதான், இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கும். அதனைக் கண்டறிய வேண்டும். காவல்நிலையத்துக்கு சாதாரண மக்கள் வர அச்சம் அடையும் நிலைதான் உள்ளது. ஆனாலும், ஒரு சிலரை வைத்து காவல்துறையையே எடை போடக்கூடாது.

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி... லாக் அப் மற்றும் கஸ்டடியல் மரணங்களை விசாரிக்க தனிச்சட்டம் தேவையா?

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சி.பி.சி.ஐ.டி அளித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி.யின் நடவடிக்கைகள் உள்ளது. `24 மணி நேரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர்’ என பொதுமக்கள் நம்பிக்கை பெற்றுள்ளனர். இதேபோல் அனைத்து வழக்குகளிலும் செயல்பட வேண்டும்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் விவகாரம் போன்று இனி எந்த விவகாரமும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வழக்கின் முக்கிய சாட்சியான தலைமைக் காவலருக்கு முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், கோவில்பட்டி நீதிமன்றம் தூரமாக இருப்பதாலும் தூத்துக்குடி மாவட்டத் தலைநகரமாக இருப்பதால், மிகவும் அருகில் மாவட்ட நீதிமன்றம் உள்ள காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத் தலைமை நீதிபதிக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி, வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அடுத்த கட்டுரைக்கு