Published:Updated:

`ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கட்டணம்; மூத்த வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும்!’ -உயர் நீதிமன்ற கிளை

நீட் குறித்த வழக்கில் நீதிபதிகள் கோரிக்கை
நீட் குறித்த வழக்கில் நீதிபதிகள் கோரிக்கை

``அரசுப் பள்ளியில் பயின்று முன்னேறிய மாணவர்கள், பல கஷ்டங்களைக் கடந்து மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் செலுத்த இயலாமல், பாதியிலேயே படிப்பைக் கைவிடுவது வலி மிகுந்தது” - நீதிபதிகள்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நெல்லையைச் சேர்ந்த ஹிரகாம்பில் தாக்கல் செய்திருந்த மனுவில்... ``நீட் தேர்வால் கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் ஆறு பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த வருடம் தமிழக அரசு 7.5% மருத்துவக் கல்லூரி இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்திருக்கிறது.

நீட் தேர்வு குறித்து மனு
நீட் தேர்வு குறித்து மனு

அதனால் அதிகப்படியான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருக்கிறது. காரணம், மருத்துவக் கல்விக் கட்டண நிர்ணயக்குழு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கான கல்விக் கட்டணங்களைக் குறைக்காமல், சென்ற ஆண்டின் கட்டணத்தையே நிர்ணயித்தும், சில வகை மருத்துவக் கல்விக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியும் நிர்ணயித்திருக்கிறது. இதனால் இடம் கிடைத்தும், சேர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனவே ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தொடரும்விதமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணத்தைக் குறைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, ``மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவரின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அரசுப் பள்ளியில் பயின்று முன்னேறிய மாணவர்கள், பல கஷ்டங்களைக் கடந்து மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் செலுத்த இயலாமல் பாதியிலேயே படிப்பைக் கைவிடுவது வலி மிகுந்தது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

தமிழக அரசு நல்ல நோக்கத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. அவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க பிரபலமானவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஏழை மாணவர் ஒருவரைத் தத்தெடுத்து, அவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இது குறித்து, சுயநிதிக் கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர், செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு