Published:Updated:

அரசுத் தரப்பில் எதிர்ப்பு! - நாம் தமிழர் கட்சியின் வேல் நடைப்பயணத்துக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம்

வேல் நடைப்பயணம் மேற்கொள்ள கோரிக்கை
வேல் நடைப்பயணம் மேற்கொள்ள கோரிக்கை

`மதம் சார்ந்து நடைபெறும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் அனைத்து மதத்தினரும் அனுமதி கேட்க வாய்ப்பிருக்கிறது’ எனக் கூறி வேல் நடைப்பயணம் நடத்த அனுமதி அளிக்க முடியாது' என நீதிமன்றம் தெரிவித்தது.

`எங்களுக்கு முருகப் பெருமான் அனுமதி கொடுத்துவிட்டார்’ என்று சொல்லி, தடையை மீறி வேல் யாத்திரையை பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் நடத்திவருவது தமிழகத்தில் சர்சையை ஏற்படுத்தியது. அனுமதியின்றி வேல் யாத்திரை நடத்துவதால் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியினர் வேல் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரியிருக்கிறார்கள்.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

திண்டுக்கல்லைச் சேர்ந்த கஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,``நாம் தமிழர் கட்சியின் பழநி மண்டலச் செயலராக பொறுப்புவகிக்கிறேன். தமிழ்க் கடவுள் முருகன் மீது தீவிர பக்திகொண்டு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துவருகிறோம். அதற்காக, `வீரத்தமிழர் முன்னணி’ எனும் பெயரில் தனி அமைப்பும் உள்ளது. இந்தநிலையில் நவம்பர் 21-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட புறவழிச் சாலையிலிருந்து, மயில் ரவுண்டானா வழியாக பழநி கோயிலுக்கு வேல் நடைப்பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தோம்.

வேல் யாத்திரை : `ஊருக்கு மட்டும்தான் உபதேசமா முதல்வரே?' - கொதிப்பில் தமிழக பா.ஜ.க!

இது தொடர்பாக நவம்பர் 5-ம் தேதியே காவல்துறையினரிடம் மனு அளித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கை ஊரடங்கைக் காரணம் காட்டி அனுமதி மறுத்துவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நவம்பர் 21-ம் தேதி வேல் நடைப்பயணம் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

அப்போது, வேல் நடைப்பயணம் நடத்துவதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, `மதம் சார்ந்து நடைபெறும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் அனைத்து மதத்தினரும் அனுமதி கேட்க வாய்ப்பிருக்கிறது’ எனக் கூறி வேல் நடைப்பயணம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஜனவரி மாதம் வேல் நடைப்பயணம் நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டது.
`அப்போதுள்ள நிலவரத்தின்படி நீதிமன்றம் முடிவெடுக்கும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு