Published:Updated:

மதுரை: ரெளடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றக் கோரிக்கை! - உள்துறைச் செயலர் பரிசீலனை செய்ய உத்தரவு

நீதிமன்றம்
நீதிமன்றம்

கொலை, கொள்ளை, வழிப்பறி, நகைப் பறிப்பு, கட்டப் பஞ்சாயத்து மற்றும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. கொலைகார கும்பல்கள் தங்களுக்குக் கீழ் கூலிப்படை அமைத்துக் கொலை செய்கின்றனர்.

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரெளடிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணையில், உள்துறைச் செயலர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெளடிகளின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அவற்றுக்கு அஞ்சாமல் ரெளடிகள் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு ஒன்றில், ``கொலை, கொள்ளை, வழிப்பறி, நகைப் பறிப்பு, கட்டப் பஞ்சாயத்து மற்றும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் அதிகரித்திருக்கின்றன. கொலைகாரக் கும்பல்கள் தங்களுக்குக் கீழ் கூலிப்படை அமைத்துக் கொலை செய்கின்றனர். ஆனால், காவல்துறையினர் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை பதிவு செய்வதில்லை.

இதனால் அச்சமின்றி மேலும் பல்வேறு குற்றங்களில் ரெளடிகள் ஈடுபடுகின்றனர். ரெளடிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்தால், குற்றம் குறையும். ரெளடிகள் மீதான வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குற்றப்பத்திரிகையை 30 நாள்களில் தாக்கல் செய்ய வேண்டும். ரெளடிகள், சமூக விரோதிகளுடன் நெருக்கமாக இருக்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

 கொலை
கொலை

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அதற்கு நீதிபதிகள் ``மனுதாரர் வழக்கு சம்பந்தமான முழுமையான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் வழக்கு விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்தனர். மேலும், இந்த மனு குறித்து தமிழக உள்துறைச் செயலர் பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு