Published:Updated:

`அரசு ஊழியர்களின் முறைகேடு; முழுச் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்!’ - உயர் நீதிமன்றம் கருத்து

உயர் நீதிமன்றம் மதுரை
உயர் நீதிமன்றம் மதுரை

முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல், முழுச் சொத்தையும் பறிமுதல் செய்து உத்தரவிட வேண்டும்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவின் இடத்திலிருந்து தன்னை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் ராஜா அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அவருடைய மகன் அரசு மருத்துவராகவும் பணியாற்றியதும் தெரியவந்தது. இதை மறைத்துத்தான் இலவச பட்டா வாங்கியிருக்கிறார்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணையின்போது இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்தநிலையில் குற்றங்கள் நீதிமன்றத்துக்குத் தெரியவந்ததும், மனுதாரர் மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ``வறுமையில் வாழும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை இந்தக் குடும்பத்தினர் ஏமாற்றிப் பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த வழக்கில் வருவாய்த்துறைச் செயலர், சமூகநலத்துறைச் செயலர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோரை எதிர் மனுதாரராகச் சேர்த்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.

``லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது?" - உயர்நீதிமன்ற கிளை

மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் அரசு ஊழியர், இது போன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசு ஊதியம் பெறும் ஓர் ஊழியர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைச் சமூக விரோதச் செயலாக நீதிமன்றம் கருதுகிறது. இவர்களைப் போன்றவர்களும் சமூக விரோதிகளே. முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும். முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல், முழுச் சொத்தையும் பறிமுதல் செய்து உத்தரவிட வேண்டும். அப்போதுதான் இது போன்ற செயல்கள் தடுக்கப்படும். அரசு ஊழியர் ஒருவருக்கு ஐந்து பட்டாக்கள் வழங்கிய தாசில்தார் மீது வெறும் பணி இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. இது கண்துடைப்பு நடவடிக்கை. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

மேலும், அந்த தாசில்தாரின் வங்கிக் கணக்கு விவரங்களையும், சொத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணமாக இருக்கிறது” என்ற நீதிபதிகள், ``மனுதாரர் மற்றும் மனுதாரருக்குப் பட்டா வழங்கிய தாசில்தார் குறித்த முழு விவரங்களையும் விசாரணை செய்து தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இவர்கள் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் போட வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு