Published:Updated:

`விலை அதிகம் உள்ள இடத்தில் விற்க உரிமையில்லையா?' -விவசாயி குமுறலால் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி

 நெல்
நெல் ( ம.அரவிந்த் )

விவசாயி ரத்தினம் மற்றும் லாரி டிரைவர் முனியன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், 256 நெல் மூட்டைகளையும், ஏற்றிவந்த லாரியையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து, தஞ்சாவூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக விவசாயி ஒருவர் நெல்லைக் கொண்டுவந்தபோது, அவரைக் கைதுசெய்தது போலீஸ். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவே, அவர் மீதுள்ள வழக்கை தள்ளுபடிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

 நெல் மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி
நெல் மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், விவசாயி ரத்தினம். இவர், கடந்த பிப்ரவரி மாதம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு கிராமத்தில் செயல்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக லாரி மூலம் கொண்டுவந்தார். இதைக் கவனித்த சிலர், வெளி மாவட்டத்திலிருந்து நெல் மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராசுவுக்குத் தகவல் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, தாசில்தார் ஜெயலட்சுமி விசாரணை நடத்தினார். இதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் ஊமத்தநாடு நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்ததுடன், 256 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய இருந்ததையும் கண்டுபிடித்தார். அத்துடன் இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

பேராவூரணி
பேராவூரணி

போலீஸார், உணவுப் பொருளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்ததுடன், நெல்லை எடுத்து வந்த விவசாயி ரத்தினம் மற்றும் லாரி டிரைவர் முனியன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். மேலும், 256 நெல் மூட்டை களையும், ஏற்றிவந்த லாரியையும் பறிமுதல்செய்தனர்.

இதை எதிர்த்து, விவசாயி ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். 'தன் சொந்த நிலத்தில் விளைந்த நெல்லை, நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து தஞ்சாவூருக்கு லாரியில் எடுத்து வந்தேன். என் மீது உணவுப் பொருள் கடத்தல் தடைச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், லாரியையும் நெல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்' என அந்த மனுவில் கூறியிருந்தார்.

விவசாயி விளைவித்த நெல்
விவசாயி விளைவித்த நெல்

`ஒரு விவசாயி விளைவித்த பொருளை ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்குச் சென்று விற்பதற்கு உரிமையில்லையா? என்னை ஏதோ கடத்தல்காரர் போல் நடத்துகிறீர்களே?' என அப்போதே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

`எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்குதான் விற்பனை செய்ய முடியும். இதில் என்ன தவறிருக்கிறது... இது எனக்குப் பெரும் மன உளைச்சலையும் பொருளாதாரச் சிக்கலையும் ஏற்படுத்திவிட்டது' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ரத்தினத்தின் மனுவை விசாரித்த நீதிபதி, `ஒரு விவசாயி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தான் விளைவித்த பொருளை விற்பனை செய்ய கொண்டு செல்வதற்கு அனுமதித்தால்தான் விவசாயம் செழிக்கும். ஆனால், விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்கு கொண்டுவந்த விவசாயி மீது வழக்குப்பதிவு செய்தது வருந்தத்தக்க விஷயம். உடனடியாக அவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்வதுடன், நெல் மூட்டைகளுடன் லாரியைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என அதிரடியாக உத்தரவிட்டார்.

`மக்களை ஈர்க்கும் அறுவடைத் திருவிழா' - பாரம்பர்ய நெல் ரகங்களைப் பரவலாக்க உன்னத முயற்சி!

இதுகுறித்து தாசில்தார் ஜெயலெட்சுமியிடம் பேசினோம். ``விவசாயி உற்பத்தி செய்த பொருளை எந்த ஊரைச் சேர்ந்த தனியாரிடமும் விற்பனை செய்வதற்கும் எந்த தடையும் இல்லை. ஆனால் ஒரு மாவட்டத்தில் விளையும் நெல்லை அந்த மாவட்டங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்தான் விற்பனை செய்ய வேண்டும் என அரசு விதி இருக்கிறது. அப்போதுதான் அந்த மாவட்டத்தில் எவ்வளவு மகசூல் இருந்தது என்பதை அறிய முடியும். அதன் அடிப்படியிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு