Published:Updated:

`மேலவளவு விடுதலை வழக்கில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் என்ன ஆனது..?’- உயர் நீதிமன்றம்

விடுதலையான வழக்கில் 13 நபர்களுக்கும் நோட்டீஸ் சென்றதா? மேலும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மேலவளவு நினைவிடம்
மேலவளவு நினைவிடம்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர், 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தை வழிமறித்து 6 பேரையும் மற்றோர் இடத்தில் ஒரு நபர் என மொத்தம் 7 பேரை ஒரு கும்பல் படுகொலை செய்தது.

madurai hc
madurai hc

இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தநிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக சிலரை முன்விடுதலை செய்தனர். இதேபோல், `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசால் உத்தரவிடப்பட்டு, கடந்த 9-ம் தேதி மேலவளவு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், விடுதலை செய்ததற்கான பிறப்பிக்கப்பட்ட அரசாணை தேவை என்பதால் அதன் நகலை வழங்கக் கோரி வழக்கறிஞர் ரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலவளவு நினைவிடம்
மேலவளவு நினைவிடம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் - ஆனந்த வெங்கடேஷ் அமர்வு, விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அரசு இது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதே போல் 13 பேருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் சென்று அடையவில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை மேலூர் டி.எஸ்.பி அதைக் கொண்டு சேர்ப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டு வழக்கை 27.11.19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், வழக்கறிஞர் ரத்தினம்.
எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், வழக்கறிஞர் ரத்தினம்.

அன்றைய தினம் அரசுத் தரப்பில் நிலை அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.