Published:Updated:

அயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய தமிழக வழக்கறிஞர் பராசரன் யார்?

மூத்த வழக்கறிஞர் பராசரன்
மூத்த வழக்கறிஞர் பராசரன்

ஸ்ரீரங்கத்தில், கடந்த 1927-ம் ஆண்டு பிறந்த பராசரன், பிரபல வழக்கறிஞர் கேசவன் ஐயங்காரின் மகன். 1983 முதல் 89-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்துள்ளார்.

''மிஸ்டர். பராசரன், நீங்கள் நீண்டநேரம் நின்றுகொண்டே விவாதம் செய்கிறீர்கள்... உங்கள் வயது மூப்பை கருத்தில் கொண்டு இருக்கை அளிக்கிறேன். அதில், அமர்ந்துகொண்டு விவாதம் செய்யலாமே...''

ஜல்பா காலனி, அனுமன் மந்திர்..! தீர்ப்புக்குப் பின் அயோத்தி #VikatanInAyodhya

''மை லார்ட்! என்மீது நீங்கள் காட்டும் கருணைக்கு நன்றி. ஆனால், ஒரு வழக்கறிஞர் நின்றுகொண்டு வாதிடுவதுதான் சரி. நான் அந்த மரபைக் கடைபிடிப்பவன்!" என்று எதிர்முனையில் பதில் வந்தது.

அயோத்தி வழக்கின்போது இப்படி கேட்டவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. பதிலளித்தவர், 92 வயது வழக்கறிஞர் பராசரன்.

தற்போது, ராமஜென்ம பூமி ஒப்படைக்கப்பட்டுள்ள ராம்லல்லா விரஜ்மானின் வழக்கறிஞர் இவர். 40 நாள்களாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக அயோத்தி வழக்கு நடந்துவந்தது. 40 நாள்களும் தவறாது ஆஜராகி வாதிட்டார் பராசரன். ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணியளவில் தொடங்கும் விவாதம், மாலை 4-5 மணி வரைகூட நீடிக்கும். இவரின், வயதைக் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , 'சேரில் அமர்ந்து வாதிடலாமே' என்று அக்கறை காட்டினார்.

கட்டப்படவுள்ள ராமர் கோயில்
கட்டப்படவுள்ள ராமர் கோயில்

அயோத்தி வழக்கு விசாரணையின்போது, சன்னி வக்ஃபு போர்டுக்காக வாதாடிய, ராஜீவ் தவானும் மூத்த வழக்கறிஞர்தான். ஒருநாள், வழக்கு நடந்துகொண்டிருந்தது. இந்து மகா சபையின் சார்பில் அளிக்கப்பட்ட ராமர் பிறந்த இடம், அதற்கான ஆதாரங்களைக் காட்டி பராசரன் வாதாடிக் கொண்டிருந்தார் பராசரன். அப்போது, குறுக்கிட்ட ராஜீவ் தவான், அந்த ஆவணங்களைக் கைப்பற்றி கிழித்து எறிந்ததோடு, 'எதிர் தரப்பு வழக்கறிஞர் முட்டாள்தனமாக வாதாடுகிறார்' என்று கடுஞ்சொற்களைக் கொட்டினார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். 'ஆவணங்களைக் கிழிப்பதை நிப்பாட்டுங்கள்' என்று கூறிய பின்னரும் ராஜீவ் தவான் நிறுத்தவில்லை. ரஞ்சன் கோகாய், 'நாங்கள் எழுந்து சென்று விடவா?' என்று கோபத்துடன், எச்சரித்தபிறகே ராஜீவ் தவான் அமைதியானார்.

பிறகு வெளிவந்த செய்திகளில் நீதிபதியின் அனுமதியுடன் மட்டுமே தான் ஒரு பயனற்ற டாக்குமென்டை கிழித்ததாகவும், வேண்டுமென்றே தான் ஆதாரத்தை கிழித்ததாக வைரலாகும் செய்தியில் உண்மையில்லை என்றும் ராஜிவ் தவான் தரப்பு சர்ச்சைக்கு விளக்கம் தந்தது.

ஆனால், 40 நாள்களில் ஒரு முறைகூட பராசரன் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து வாதத்தில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறார்கள். அயோத்தி வழக்கு விசாரணை அக்டோபர் 16-ந் தேதி முடிவுற்றது. கடைசி நாளில், விவாத அறையை விட்டு முதலில் வெளியேறிய பராசரன், கதவு அருகே அமைதியாகக் காத்திருந்தார். 'யாருக்காகக் காத்திருக்கிறார்' என்று அவரின் உதவியாளர்கள் உடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

ராஜீவ் தவான்
ராஜீவ் தவான்

சுமார், 15 நிமிடங்கள் கழித்தே எதிர்தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் அறையை விட்டு வெளியே வந்தார். ராஜீவ் தவானுடன் கைகுலுக்கிக்கொண்ட பராசரன், அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதைப் பார்த்த அவரின் உதவியாளர்கள் வியந்து போனார்கள். அவர்களிடத்தில், 'வழக்கறிஞர்கள் விவாத அறையில் சண்டை போட்டுக்கொள்ளலாம். நீதிமன்றத்துக்கு வெளியே நல்ல நண்பர்கள்'' என்றார், பராசரன்.

ஸ்ரீரங்கத்தில், கடந்த 1927-ம் ஆண்டு பிறந்த பராசரன், பிரபல வழக்கறிஞர் கேசவன் ஐயங்காரின் மகன். 1983 முதல் 89-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்துள்ளார். 1976, 77-ம் ஆண்டுகளில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றினார். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில், இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட நெடுங்கால தொடர்புகொண்டவர். பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளையும் பெற்றிருக்கிறார். கடந்த 1949-ம் ஆண்டு, பராசரன், சரோஜா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அடுத்த வருடம்தான் வழக்கறிஞரானார். சரோஜாவைத் தன் முதல் மனைவி என்றும், law-வை தன் இரண்டாவது மனைவி என்றும் பராசரன் வேடிக்கையாகக் குறிப்பிடுவார்.

பாபர் மசூதி
பாபர் மசூதி
`தீர்ப்புக்குப் பின் எப்படி இருக்கிறது அயோத்தி?' - நேரடி விசிட் #VikatanInAyodhya

அயோத்தி வழக்கின்போது, பராசரன் வைத்த முக்கியமான கருத்து நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ''அயோத்தியில் 50, 60 மசூதிகள் உள்ளன. முஸ்லிம்கள் அங்கே சென்று தொழுது கொள்ளலாம். இந்த இடம் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. பிறந்த இடத்தை யாரும் மாற்ற முடியாது" என்கிற வாதம்தான் அது. இந்த வாதம்தான் பராசரனுக்கு வெற்றி தேடிக்கொடுத்தது. ''இந்த வழக்குதான் என் கடைசி வழக்கு. இனிமேல் எந்த வழக்கிலும் நான் ஆஜராக மாட்டேன். இறப்பதற்கு முன் என் லட்சியத்தை எட்டிவிட்டேன்'' என்று தீர்ப்புக்குப் பிறகு பராசரன் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு