Published:Updated:

`வழக்கு முடியும் வரையில் அங்கேயே இருங்கள்!' -வேலூருக்கு வந்த மேலவளவு குற்றவாளிகள்

மேலவளவு கொலை வழக்கு
மேலவளவு கொலை வழக்கு

மேலவளவு கொலை வழக்கில், விடுவிக்கப்பட்ட 13 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, வேலூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேரைக் கடந்த 1997-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி ஒரு கும்பல் அவர்களை வெட்டிப் படுகொலை செய்தது. 

மேலவளவு நினைவிடம்
மேலவளவு நினைவிடம்

இந்தக் கொடூர வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில், 3 பேர் அண்ணா பிறந்தநாளையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் 2008-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். உடல்நலக்குறைவால் ஒருவர் சிறையிலேயே இறந்துவிட்டார். 

`மீதமுள்ள 13 கைதிகளையும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்’ என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அதையடுத்து, கடந்த மாதம் 9-ம் தேதி 13 பேரும் தமிழக அரசால் முன்விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.

`வழக்கு முடியும் வரை மேலவளவு ஊருக்குள் 13 பேரும் நுழையக் கூடாது. அதுவரை வேலூரில் தங்கியிருக்குமாறு’ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, 13 பேரும் நேற்று வேலூருக்கு வந்தனர். ‘முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார் முன்பு ஆஜராக வேண்டும். இரண்டாவது மற்றும் நான்காவது வார ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர் முன்பு ஆஜராக வேண்டும்’ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலவளவு கொலை வழக்கு
மேலவளவு கொலை வழக்கு

அதன்படி, 13 பேரில் ராமர், சேகர், மணிகண்டன் ஆகிய மூன்று பேர் காட்பாடி காந்தி நகர் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செல்வம், மனோகரன், அழகு, சொக்கநாதன், பொன்னையா, ராஜேந்திரன், ரங்கநாதன், சக்கரமூர்த்தி, சின்ன ஒடுங்கன், ஆண்டிச்சாமி ஆகிய 10 பேர் பாகாயம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 13 பேரும் வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார் முன்பு ஆஜராக உள்ளனர்.

பின் செல்ல