மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் 1997-ல் ஊராட்சித் தேர்தலில் பட்டியல் சமூகத்தினர் போட்டியிடக் கூடாது என்று மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலரின் மிரட்டலை மீறி, போட்டியிட்டு வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் கொடூரமாகப் படுகொலைசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்போது தமிழகத்தையே அதிரச்செய்தது.

நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடந்துவந்த இந்த வழக்கில் ராமர் என்பவர் உள்ளிட்ட 17 பேருக்கு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதிசெய்தது. தண்டனை பெற்றவர்களில் மூன்று பேர் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வயதையும் நன்னடத்தையையும் காரணம் காட்டி முதலில் விடுவிக்கப்பட்டனர். மற்றொருவர் மரணமடைந்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2019-ல் ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களின் முன்விடுதலையை எதிர்த்து இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ரத்தினம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை செய்து, விடுதலையான 13 பேரும் மதுரை மாவட்டத்தைவிட்டு வெளியேறி, வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. பின்னர் இந்த உத்தரவு உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது.

இந்த நிலையில், கொலையானவர்களின் உறவினர்களின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்களில் "13 பேரை முன்கூட்டியே விடுவிப்பதற்காக வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "சட்ட விதிகளின்படியே முன் விடுதலை செய்யப்பட்டது" என வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு, "13 பேரும் பரோலில் விடப்பட்டபோது எந்தவிதச் சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. முன்கூட்டியே விடுதலை செய்தபோதும் மேலவளவில் எந்தச் சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. 13 பேரின் முன்விடுதலை குறித்து உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்துத் தரப்புச் சூழலையும் பரிசீலனை செய்த பிறகே தமிழக அரசு அரசாணையை பிறப்பித்திருக்கிறது. எனவே, இதில் தலையிட விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாதிக்கப்பட்டவர்களுடன் ரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆலோசித்துவருகிறார்கள்.