Published:Updated:

மரண தண்டனை டு விடுதலை... 31 ஆண்டுகள் - ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை

பேரறிவாளன் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை 31 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இந்த வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை.

மரண தண்டனை டு விடுதலை... 31 ஆண்டுகள் - ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை 31 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இந்த வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை.

Published:Updated:
பேரறிவாளன் விடுதலை

தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு, மே மாதம் 21-ம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படை பெண் மூலமாகக் குண்டு வெடிக்கச் செய்து கொல்லப்பட்டார். 1991-ம் ஆண்டு, மே 21-ம் தேதி இரவு 10:20 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, பொதுமக்களிடம் பேசி கொண்டிருந்தபோது, பெண்மணி ஒருவர் ராஜீவின் கழுத்தில் மாலை அணிவித்துவிட்டு கீழே குனிந்தார். அடுத்த நோடி மிகப்பெரிய அளவிலான சத்தம் கேட்டது. அந்தத் தற்கொலைப்படை தாக்குதலில் ராஜீவ் காந்தி, லதா கண்ணன், கோகிலா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது இக்பால் உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் உயிரிழந்தனர்.

'ராஜீவ் காந்தி கொலையாவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட படம்
'ராஜீவ் காந்தி கொலையாவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட படம்

மே 22-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அன்றைய தினமே இந்தக் கொலை வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐ.ஜி-யாக இருந்த டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, மத்தியப் புலனாய்வுத்துறை மே 24-ல் புதிதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தது. இந்தக் கொலையில் சந்தேகத்துக்குரிய கொலையாளி என்று பெண் ஒருவரின் படம் மே 29-ம் தேதி வெளியிடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கின் முதல் கைதாக ஜூன் 11-ல் நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், 14-ம் தேதி நளினி, முருகன் ஆகிய இருவரையும் சைதாப்பேட்டையில் கைதுசெய்யப்பட்டனர். 19-ல் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். பின்னர், விசாரணை வளையம் பெரிதானது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப் பின்னர், 1992, மே 20-ல் 55 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் 12 பேர் தற்கொலை செய்துகொண்டனர். மூன்று பேர் தலைமறைவாகினர். 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 1998-ம் ஆண்டு, ஜனவரி 28-ல் 26 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்

இந்த தண்டனையை எதிர்த்து பேரறிவாளன் உட்பட தண்டிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 1998, செப்டம்பர் முதல் 1999, ஜனவரி வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. மே 5-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மீதமிருந்த 18 பேரும் தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு அக்டோபர் 10-ம் தேதி கருணைமனு அளித்தனர். ஆனால், அந்த மனுக்களை ஆளுநர் பாத்திமா பீவி நிராகரித்தார். இதனால், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

நான்கு முதல்வர்களின் கனவு

ஆளுநரின் உத்தரவை நவ.25-ல் ரத்துசெய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவையில் முடிவெடுத்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் காரணமாக, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில், 2000-ம் ஆண்டு, ஏப்ரல் 19-ம் தேதி அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டு, குறைக்கவும்பட்டது. இதனால், மீதமுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரும் ஏப்ரல் 26-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்
அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்

ஆனால், 2000 - 2007-ம் ஆண்டு வரை இந்தக் காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். ஆனால், 2011-ம் ஆண்டு கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அப்போதைய குடியரசுத் தலைவர் அறிவித்தார். இதனால், செப்டம்பர் மாதத்தில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் எனச் செய்தி வெளியானது. இதனால், 2011-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் உட்பட மூன்று பேரும் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிடத் தடைவிதித்தது. இதனால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கும், தீர்ப்பு உறுதியானது.

இதனையடுத்து, தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக 2014-ம் ஆண்டு, பிப்ரவரி19-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி, விடுதலைக்குத் தடையாணையும் வாங்கியது. இந்த வழக்கை மேலும் விசாரித்த நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு, 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. அதன்படி, ஏழு பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு 2016-ம் ஆண்டு, மார்ச் 2-ம் தேதி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது. 2017-ம் ஆண்டு, ஆக்ஸ்ட் மாதம் 24-ம் தேதி பேரறிவாளனுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக பரோல் வழங்கினார்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

2018-ம் ஆண்டு, செப்டம்பர் 6-ல் ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தில் உள்ள 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதற்கு ஏற்ற வழிகளை அமைக்க ஏழு பேரையும் விடுதலை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை 2018, செப்டம்பர் 9-ல் தீர்மானம் நிறைவேற்றியது. அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021, மே 20-ல் கடிதம் எழுதினார்.

அதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்திவைக்கவும், விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்துவந்தது. விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆனந்த பறையடிக்கும் பேரறிவாளன்
ஆனந்த பறையடிக்கும் பேரறிவாளன்

மேலும், `இந்த விவகாரத்தில் மத்திய அரசுத் தரப்பில் எந்தச் சட்டபூர்வ வாதத்தையும் முன்வைக்கவில்லையென்றால் பேரறிவாளனை விடுவிக்க நாங்களே முடிவுவெடுப்போம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து 2022-ம் ஆண்டு, மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது. முன்னதாக, மருத்துவ சிகிச்சை பெற என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக பல முறை அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism