Published:Updated:

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எழுதிய நீதிபதி யார்?

உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு அயோத்தி நில வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருமித்த தீர்ப்பாக வந்துள்ள நிலையில், தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்பது குறிப்பிடப்படவில்லை.

ஐந்து நீதிபதிகள்
ஐந்து நீதிபதிகள்

நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவந்த அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட அந்த 2.77 ஏக்கர் நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்கு இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த அரசியலமைப்பு அமர்வின் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளதாக ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். ஆனால் தீர்ப்பு நகலில் தீர்ப்பு எழுதிய நீதிபதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தெரியவருகிறது.

தீர்ப்பு முடிவுரை
தீர்ப்பு முடிவுரை

பொதுவாக அரசியலமைப்பு அமர்வுகள் விசாரிக்கிற வழக்குகளில் நீதிபதிகள் மாறுபட்டு தீர்ப்பு அளித்தால், தனித்தனியாக தீர்ப்பு எழுதப்படும். அதேவேளை ஒருமித்த தீர்ப்பாக இருந்தால் எந்த நீதிபதி தீர்ப்பை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். தீர்ப்பின் இறுதியில் அமர்வில் உள்ள அனைத்து நீதிபதிகளின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும்.

இந்த வழக்கில் ஒருமித்த தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளபோது தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அதோடு தீர்ப்பின் முடிவுரையில், "மேற்கண்ட காரணங்கள் அனைத்திலும் ஒப்புக்கொள்கிற போதும், நீதிபதிகளில் ஒருவர் 'சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களின் நம்பிக்கையின் படி ராமர் பிறந்த இடம் தானா' என்ற கேள்விக்கு தனியான காரணங்களை பதிவு செய்திருக்கிறார். அந்த நீதிபதியின் கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன" என்றிருக்கிறது. அந்தத் தனியாக கருத்துகளைப் பதிவு செய்துள்ள நீதிபதியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. இதனால் அயோத்தி தீர்ப்பை எழுதியது யார் என சட்ட வல்லுனர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.