தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டிவருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது வேட்பாளருடன் மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட 10 நாள்களில் மீண்டும் வழக்கைப் பட்டியலிட உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவலைக் காரணம் காட்டி, தேர்தலைத் தள்ளிவைக்க முடியாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.