கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை வாட்டி வதைத்துவருகிறது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திவருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தடுப்பூசி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, தனிப்பட்ட நபரின் விருப்பமில்லாமல் யாருக்கும் தடுப்பூசி செலுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி சான்றிதழ்களைப் பொது இடங்களில் காண்பிக்கும் அவசியத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் மனு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஒரு தனிநபரின் விருப்பத்துக்கு மாறாகத் தடுப்பூசியைச் செலுத்துமாறு இந்திய அரசாங்கமோ, மத்திய சுகாதார அமைச்சகமோ கூறவில்லை என்றும், மக்கள்நலன் கருதி கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மட்டுமே தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும்,

மேலும் பொதுமக்கள் நலன் கருதி, தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தவே அனைத்து சமூக வலைதளங்களிலும், விளம்பரங்கள் செய்யப்பட்டுவருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தனிநபரின் விருப்பத்துக்கு மாறாகவும், தடுப்பு ஊசியை வலுக்கட்டாயமாக செலுத்த முடியாது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழைக் கையோடு எடுத்துச் செல்லுமாறு மத்திய அரசு எந்தவித உத்தரவும் பிறக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.