Published:Updated:

சேகர் ரெட்டி வழக்கு: `சிறப்புப் பரிசு' ரெட்டிக்கா.. அ.தி.மு.க-வுக்கா?

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் எங்கிருந்து வந்தன... அந்தக் காலகட்டத்தில் ஒரு 2,000 ரூபாய் நோட்டை வாங்குவதற்கே மணிக்கணக்காக வங்கிகளின் முன்பாக காத்துக்கிடந்தார்கள் மக்கள்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான வழக்கை முடித்துவைத்துவிட்டது சி.பி.ஐ நீதிமன்றம். `அவர் மீதான புகார்களுக்கு எந்தவித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை' என நீதிபதி தெரிவித்திருக்கும் வார்த்தைகள், அரசியல்ரீதியாக விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

பன்னீர்செல்வத்துடன் சேகர் ரெட்டி
பன்னீர்செல்வத்துடன் சேகர் ரெட்டி

தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் சேகர் ரெட்டி மீதான பணப் பரிமாற்ற வழக்கை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. 2016-ம் ஆண்டு இறுதியில், முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளும்கட்சியின் ஆதரவுபெற்ற தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை அரங்கேறியது. இந்தச் சோதனையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான புள்ளிகள் பலரும் சிக்கினர். அவர்களில் சேகர் ரெட்டி மிக முக்கியமானவர். இவர் மணல் குவாரி நடத்துவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்தார். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதாகவும், இதற்காகப் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பணத்தைப் பதுக்கிவைத்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி, அவரின் உறவினர் சீனிவாச ரெட்டி, பிரேம்குமார் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பெட்டி, பெட்டியாக புத்தம் புது 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனை நான்கு நாள்களுக்கும் மேலாக நீடித்தது. முடிவில், ரூ.166 கோடி பணம், 179 கிலோ தங்கம் உட்பட ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. அந்த ஆவணங்களை பெரிய அளவிலான டிராவல் பேக்குகளில் அடைத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, 198 இடங்களையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் மூலம், மாநில அரசுக்கு 247.13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ விசாரணை நடத்திவந்தது. இந்த வழக்கில்தான் முறைகேட்டுக்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி இந்த வழக்கை முடித்துக்கொள்ள சி.பி.ஐ முடிவு செய்தது. இதை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹரும் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

`முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதா?!' -சேகர் ரெட்டி அலுவலகத் தீ விபத்தால் சர்ச்சை

இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணை முறையையே கேள்வியெழுப்பும் விதமாக அமைந்திருக்கிறது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ` சி.பி.ஐ அதிகாரிகள் சாட்சிகளின் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், அத்துடன் தேவையான ஆதாரங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக வழக்கை முடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது' எனக் கூறிவிட்டு, ` சேகர் ரெட்டி மீதான வழக்கு தொடர்பாக சி.பி.ஐ தரப்பில் 170 சாட்சிகள் இருக்கின்றன. இந்த சாட்சிகளின் மூலம் சி.பி.ஐ அதிகாரிகள் 879 ஆவணங்களைச் சேகரித்திருந்தனர். ஆனால், இந்த ஆவணங்களால் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. சேகர் ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், கார்கள் உள்ளிட்ட பொருள்களைத் திருப்பி வழங்கலாம்' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேகர் ரெட்டி மீதான வழக்கு முடித்துவைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், `சேகர் ரெட்டிக்கு எதிரான 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்குக்கு ஆதாரமில்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ கூறி, அந்த வழக்கை முடித்துவைத்து மத்திய பா.ஜ.க. அரசு அ.தி.மு.க-வுக்கு சிறப்புப் பரிசை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. துண்டுச்சீட்டை வைத்து துப்புத் துலக்கும் ஆற்றல் படைத்த சி.பி.ஐ அமைப்புக்கு 170 பேருக்கு மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த பிறகும், 800-க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பிறகும், ஆதாரம் கிடைக்கவில்லை; 2,000 ரூபாய் புதிய நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒரு வங்கி அதிகாரியைக்கூட வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கவில்லை என்று உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவுக்கு ஒரு விசாரணையை நடத்தி, இப்படியொரு சிறப்புப் பரிசு கிடைத்திருக்கிறது என்றால், இந்தப் பரிசை வழங்கியது சி.பி.ஐ என்ற அமைப்பு என்பதைவிட, மத்திய பா.ஜ.க அரசுதான் என்பதை அடித்துச் சொல்ல முடியும். முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நெருக்கமான சேகர் ரெட்டி வழக்கில் மட்டும்தான், `வங்கிகள் கொடுத்த நோட்டுகளுக்கு சீரியல் நம்பரைக் கண்டுபிடிக்க முடியாத' அதிசயம் நடந்திருக்கும். இதில் வங்கி அதிகாரிகள்மீது வழக்கு போடும் சி.பி.ஐ., ஏன் சேகர் ரெட்டி விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு போடவில்லை?' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். ``பொதுவாக, சி.பி.ஐ விசாரணை நடந்தால் நியாயம் கிடைத்துவிடும் எனப் பல மாநில அரசுகள், சி.பி.ஐ-யை நோக்கி வழக்குகளைத் தள்ளுகின்றன. சேகர் ரெட்டி மீதான வழக்கு என்பது சி.பி.ஐ மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அரசியல்ரீதியாகப் பார்த்தால் ஓட்டுப் போட்ட மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதைவிட, தேர்தல் நிதி கொடுப்பவர்களுக்குச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. இவர்களைத்தான் முக்கியமானவர்களாகப் பார்க்கிறார்கள்.

செந்தில் ஆறுமுகம்
செந்தில் ஆறுமுகம்

அப்படியானால், சேகர் ரெட்டி வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் எங்கிருந்து வந்தன... அந்தக் காலகட்டத்தில் ஒரு 2,000 ரூபாய் நோட்டை வாங்குவதற்கே மணிக்கணக்காக வங்கிகளின் முன்பாக காத்துக்கிடந்தார்கள். 2ஜி வழக்கும் இதேபோல்தான் முடிவுக்கு வந்தது. `ஆதாரம் வரும் என நாங்கள் காத்திருந்தோம்' என்றார் 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி. அப்படித்தான் இந்த வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு