Published:Updated:

நுபுர் ஷர்மாவை உச்ச நீதிமன்றம் கண்டித்தது தவறா? - போர்க்கொடி தூக்கிய 117பேர்... புது சர்ச்சை

நுபுர் ஷர்மா கருத்து - உச்ச நீதிமன்றம் கண்டனம்

நுபுர் ஷர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனக்கோரி ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 117 பேர் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நுபுர் ஷர்மாவை உச்ச நீதிமன்றம் கண்டித்தது தவறா? - போர்க்கொடி தூக்கிய 117பேர்... புது சர்ச்சை

நுபுர் ஷர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனக்கோரி ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 117 பேர் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நுபுர் ஷர்மா கருத்து - உச்ச நீதிமன்றம் கண்டனம்

`நபிகள் நாயகம் குறித்த பா.ஜ.க செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றக் கருத்தை எல்லைமீறிய செயல் என்று விமர்சித்தும் அந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும் எனக்கோரியும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 117 பேர் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.'

நுபுர் ஷர்மா விவகாரம்
நுபுர் ஷர்மா விவகாரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நுபுர் ஷர்மாவின் சர்ச்சை பேச்சு:

கடந்த மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருந்தார். அந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் கொதிப்படையச் செய்தது. நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிர்வினையாக, 15-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. சர்வதேசப் பிரச்னையாக இந்த விவகாரம் வெடிக்கவும், நுபுர் ஷர்மாவை தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது பா.ஜ.க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், `இடைநீக்கம் மட்டும் போதாது நுபுர் ஷர்மா மீது சட்ட நடவடிக்கை, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்' என பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டங்களிலும், பேரணியிலும் ஈடுபட்டனர். குறிப்பாக, உ.பி. போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை தடியடி நடத்தி கலைத்தும், அவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தும் அரங்கேற்றப்பட்ட தொடர் சம்பவங்கள் இந்திய மக்கள் மத்தியில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையத்தில் நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உலக நாடுகளின் எதிர்ப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களின் கண்டனங்கள், இஸ்லாமியர்களின் போராட்டங்கள் என அத்தனைக்குப் பிறகும் நுபுர் ஷர்மா மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, அவரது வீட்டுக்கு கொலை மிரட்டல் காரணமாக காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

உச்ச நீதிமன்றத்தின் கண்டனம்:

இந்தச் சூழ்நிலையில், நுபுர் ஷர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்டிருக்கும் வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``ஜனநாயகம் அனைவருக்குமே பேச்சுரிமை வழங்கியுள்ளது. ஆனால், அதற்காகவெல்லாம் ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. மதம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய ஒரு நிலையில், ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ட்விட்டர்

ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம். அனைத்து மக்களும் மற்ற மதத்தினருடைய நம்பிக்கைகளிலும், மற்ற விவகாரங்களிலும் மரியாதைக் கொடுக்கவேண்டும் என்ற சூழலில், நுபுர் ஷர்மா இப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்" என கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. மேலும், `` நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக 117 பேர் கூட்டறிக்கை:

இந்த நிலையில், நுபுர் ஷர்மாவைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிஷிதிஜ் வியாஸ், குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எம்.சோனி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆர்.எஸ். ரத்தோர், பிரசாந்த் அகர்வால், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என்.திங்ரா உள்ளிட்ட 15 முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ஆர்.எஸ்.கோபாலன், எஸ்.கிருஷ்ண குமார், நிரஞ்சன் தேசாய் மற்றும் ஓய்யுபெற்ற உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் எஸ்.பி.வைத், பி.எல்.வோஹ்ரா உள்ளிட்ட 77 ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள் என மொத்தம் 117 பேர் கூட்டாகக் கையெழுத்திட்டு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அந்த அறிக்கையில், ``அரசியலமைப்பு சட்டப்படி அனைத்து அரசு அமைப்புகளும் தங்கள் கடமைகளைச் செய்யும்போது எந்தவொரு நாட்டின் ஜனநாயகமும் அப்படியே இருக்கும் என்பதை குடிமக்களாகிய நாங்கள் நம்புகிறோம். ஆனால், நுபுர் சர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்துகள் லக்ஷ்மண ரேகையை மீறியிருக்கிறது. அத்தகைய கருத்து ஒரு வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயத்தை எங்களுக்கு ஏற்படுத்திவிட்டது. நீதித்துறை வரலாற்றில் இதுபோன்ற துரதிருஷ்டவசமான விமர்சனங்களை இதுவரை யாருமே முன்வைத்தது இல்லை. உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் நீதித்துறை வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக அமைந்திருக்கின்றன.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா
ட்விட்டர்

ஜனநாயக மதிப்புகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் இவை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதில் உடனடியான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கருத்துக்களை நீதித்துறையின் உரிமை மற்றும் நேர்மையின் அடிப்படையில் புனிதப் படுத்திவிட முடியாது. இந்தக் கருத்துக்கள் நீதித்துறையின் வரம்பை மீறிய செயலாகும். நுபுர் ஷர்மாவின் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய அணுகுமுறை எந்த வகையிலும் பாராட்டுக்குரியதல்ல. இதன்மூலம், நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் புனிதத்தன்மையும் மரியாதையும் பாதிக்கப்பட்டிருக்கிறது" என தெரிவித்திருக்கின்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கோரிக்கை:

இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர் ஜெய சுகின் என்பவர், ``உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது சட்டப்படி தவறு. எனவே, நீதிபதிகளுக்கும், நீதித்துறைக்கும் எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர அனுமதிக்கவேண்டும்" எனக்கோரி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து தொடர்பான சர்ச்சை இன்னும் நீடித்துக்கொண்டே செல்கிறது!