கர்நாடக மாநிலம், உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு, கல்லூரி நிர்வாகம் தடைவிதித்தது. இதை எதிர்த்து மாணவிகள், கல்லூரி வாசலில் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாராம் நாடளவில் பெரும் பேசுபொருளானது. இதையடுத்து, கல்லூரி மாணவிகள் சிலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் 25-வது பிரிவை மேற்கோள்காட்டி, `ஹிஜாப் அணிவதென்பது மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையின் பகுதியல்ல' எனக் கூறி ஹிஜாப் அணியத் தடைவிதித்தது.

அதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கெதிராக, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த நிலையில், அந்த மனுக்கள்மீதான மேல்முறையீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா
அடங்கியோர் அமர்வுக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். `ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்' என ஹேமந்த் குப்தாவும், `தடை செல்லாது!' என சுதான்ஷு துலியாவும் தீர்ப்பு வழங்கியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த வழக்கில் நீதிபதி சுதான்ஷு தூலியா, ``ஹிஜாப் அணிய வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவரின் விருப்பம். மாணவிகளுக்குக் கல்வி அளிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்'' எனக் கூறி பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு விதித்த தடை உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
ஆனால், நீதிபதி ஹேமந்த் குப்தா, ``ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவு ஏற்கப்படுகிறது" எனக் கூறி, மாநில அரசின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.