
ஜாமீன் வழக்கு ஒன்றின் விசாரணையை, காணொலிக் காட்சி மூலமாக நடத்திக்கொண்டிருந்தார் நீதிபதி. காரை ஓட்டியபடியே, தன் கட்சிக்காரருக்காக வாதாடிக் கொண்டிருந்தார் அந்தக் `கற்றறிந்த’ வக்கீல்.
பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளால் வீட்டில் தாய்மார்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையிலானவை, வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணைகளில் சில வக்கீல்கள் நடத்தும் கேலிக்கூத்துகள். தலைவலித் தைலத்தின் துணையோடு சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் நீதியரசர்கள்!
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், ஏப்ரல் 24
நீதியரசர் சஞ்சீவ் பிரகாஷ் சர்மா முன்னிலையில், ஜாமீன் தொடர்பான ஒரு காணொலி விசாரணை நடந்தது. அதில், உள்பனியனோடு ஹாயாக காட்சியளித்தார் வக்கீல் ஒருவர். கடுப்பான நீதிபதி, `கொரோனா காலத்திலும், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக வழக்கு நடத்துகிறோம். சரியான ஆடை அணிந்து வர வேண்டாமா?’ எனக் கடிந்துகொண்டார். தொடர்ந்து, பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடம் புகாரும் அளிக்கப்பட்டது. `அட்வகேட் ஆக்ட் 49(1) (gg) பிரிவின்படி, வக்கீல்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதற்கு விதி உள்ளது. அதை மீறும் வகையில் இது போன்ற ஆடைகள் அணிவதை ஏற்க முடியாது’ என அந்த வழக்கறிஞரை எச்சரித்தது பார் கவுன்சில்.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், ஜூன் 10
ஜாமீன் வழக்கு ஒன்றின் விசாரணையை, காணொலிக் காட்சி மூலமாக நடத்திக்கொண்டிருந்தார் நீதிபதி. காரை ஓட்டியபடியே, தன் கட்சிக்காரருக்காக வாதாடிக் கொண்டிருந்தார் அந்தக் `கற்றறிந்த’ வக்கீல். சாலையில் ஓடும் வாகனங்களும் இரைச்சல் சத்தம் நீதிபதியின் நிம்மதியைக் குலைத்தன. இந்தச் சத்தம் போதாதென `பூம் பூம்’ என ஹார்ன் அடித்தபடியே ஆட்டோ ஒன்று அந்த வழியாகச் செல்ல, கோபத்தில் `ஹார்ன் அடிக்காம போடா ******’ எனக் கெட்ட வார்த்தைகளால் ஆட்டோக்காரரை வசைமாரிப் பொழிந்தார் வக்கீல். எதிர்முனையில் `ஷாக்’ ஆன நீதிபதி, வக்கீலுக்கு ரூ.100 அபராதம் விதித்த கையோடு, பார் கவுன்சிலுக்கும் புகார் மனுவைத் தட்டிவிட்டார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 13
பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்தது தொடர்பாக பி.எஸ்.பி தொடர்ந்த ஒரு வழக்கு அது.
நீதிபதி மகேந்திர குமார் கோயல் முன்னிலையில் நடந்த விசாரணையில், காங்கிரஸ் சார்பாகத் தனது வாதத்தை முன்வைத்துக் கொண்டிருந்தார் கபில் சிபல். அதேநேரம் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், பேப்பரால் முகத்தை மறைத்துக்கொண்டு ஹூக்கா பிடித்துக் கொண்டிருந்தார். மூடுபனியைப்போல திடீரென்று காணொலியை மறைத்த புகையைக் கண்டு அதிர்ந்துபோனார் நீதிபதி. வழக்கறிஞரின் வயது கருதி ‘இது புகை பிடிப்பதற்கான வயது அல்ல, உடல்நலம் பாதிக்கும்’ என அறிவுறுத்தியதோடு விட்டார். இத்தனைக்கும் ராஜீவ் தவான் ஏராளமான சட்டப் புத்தகங்களை எழுதியவர். சமூக ஆர்வலரும்கூட!
இவை வெளியில் வந்த சில சம்பவங்கள் மட்டுமே. இன்னும் இவைபோல ஏராளமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. படுக்கையில் படுத்துக்கொண்டே வாதம் செய்வது, தெருவில் நின்றபடி பாயின்ட்டுகளை எடுத்துவைப்பது, குழந்தைகள் அழுகை, குக்கர் விசில் சத்தம் என நீதித்துறையின் மாண்புக்கே உலைவைத்துக்கொண்டிருக்கின்றனர் சில வக்கீல்கள். ‘இதனால் சில நீதியரசர்களின் முகங்களைப் பார்க்கவே படுசோகமாக இருக்கிறது’ என்கிறார்கள் நீதித்துறை ஊழியர்கள்.
அதேநேரம், இந்த விவகாரத்தில் வக்கீல்கள் தரப்பு நியாயம் வேறுவிதமாக இருக்கிறது. “கொரோனா சீஸன்ல எங்க கேஸை லிஸ்ட்ல கொண்டு வர்றதுக்கே குட்டிக்கரணம்லாம் போட வேண்டியிருக்கு. அது நடந்தாலே பெரிய சாதனைதான். `ரிட் பெட்டிஷனா இந்த நம்பருக்குப் போன் போடு... சிவில் கேஸா இந்தா இன்னொரு நம்பர்... ஹேபியஸ் கார்பஸா... அதுக்கு இந்தா புது நம்பர்’னு நம்பர் நம்பரா கொடுத்திருக்காங்க. வக்கீல்களெல்லாம் மாத்தி மாத்தி ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பாங்கபோல... லைன் கிடைக்காது. முப்பது நாப்பது தடவை ட்ரை பண்ணி ரிங் போனா, போன் எடுக்க மாட்டாங்க. எடுத்தாலும், கேஸை லிஸ்ட்ல கொண்டுவர்றது பெரும்பாடு. அதுக்கப்புறம், எப்படா வீடியோ கால் வரும்னு காத்திருக்கணும். இவ்வளவு பதற்றத்துலதான் நாங்க ஆன்லைன்ல பேச வேண்டியதா இருக்கு.

நல்லா முகம் தெரிஞ்ச வக்கீல்னா உடனே கேஸ் லிஸ்ட்ல வருது. இதனால கிளையன்ட்டுகளைச் சமாதானப்படுத்த முடியலை. போன வாரம் புழல் ஜெயில்லருந்து பேசின கைதி ஒருத்தன், `என்ன சார்... மூணு மாசமா பரோல் கேட்டுட்டே இருக்கேன். உங்களால கேஸ் நடத்த முடியலைனா சொல்லிருங்க, நான் பார்த்துக்கிறேன். நான் யார்னு தெரிஞ்சுதான் இப்படிப் பண்றீங்களா?’னு மிரட்டறான். அது வேற ஒரு பக்கம் டர்ர்ர்ர்ராகுது. விசாரணை நடக்குறப்போ சிக்னல் கட் ஆகிடுச்சுன்னா, எங்க நிலைமை ஐயோ பாவம்தான். ஜட்ஜ் பி.ஏ-கிட்டருந்து ‘சிக்னல் கிடைக்கிற இடத்துக்கு வந்து பேசுங்க’னு உடனே கால் வரும். சிக்னலைக் கண்டுபிடிக்கிறதுக்கு போனைக் கையில பிடிச்சுக்கிட்டே வடிவேலு மாதிரி தெருவெல்லாம் நடக்க வேண்டியதா இருக்கு.
ஆன்லைன்ல கேஸ் வந்தா, அரசுத் தரப்பு வக்கீல் என்ன சொல்றாரோ, அதுதான் எடுபடுது. நாங்க பாயின்ட்ஸ் எடுத்துவெச்சுப் பேசறப்போ பார்த்து, ‘கேட்கலை... கேட்கலை... சத்தமா’னு ‘பிகில்’ விஜய் மாதிரிதான் பதில் வருது. நாங்க படற கஷ்டத்தைப் பார்த்து குடும்பமே சிரிக்குது. எப்போ கொரோனா முடிஞ்சு கோர்ட்டுக்குப் போவோம்னு இருக்கு” என்றார் வேதனை கலந்த சிரிப்புடன்.
வழக்கறிஞர்களின் மனக்குரல் கேட்டதோ என்னவோ, ஒருவழியாக `செப்டம்பர் 7-ம் தேதி முதல் நீதிமன்றங்கள் வழக்கம்போல் இயங்கும்’ என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இனி, நீதியின் குரல் நேரில் ஒலிக்கட்டும்!