Published:Updated:

ஆன்லைன் சூதாட்ட வழக்கு: `கோலி, கங்குலி, தமன்னாவுக்கு நோட்டீஸ்!’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

`பிரபல நபர்கள் பொதுமக்களின் நலனைக் கருதாமல் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர்’ என்று நீதிபதிகள் ஆதங்கம்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்தச் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ``உடனே அரசு பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டிருக்கிறது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நீலமேகம், வழக்கறிஞர் முகமது ரஸ்வி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், ''கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையதள சேவையைப் பயன்டுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி இணையதளத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பல்வேறு சூதாட்ட விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இதனால் ஏராளமான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்'' எனவும், ``ஆன்லைன் சூதாட்டத்துக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் விளம்பரம் செய்கிறார்கள். அதனால், இளைஞர்கள் அதை நம்பி ஈடுபடுகிறார்கள். இதில் பணத்தை இழந்து மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆன்லைன் சூதாட்டம் சிலர் உயிரையும் பறித்துவிடுகிறது. கடந்த இரண்டு மாதத்தில் 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் விராட் கோலி, தமன்னா உட்பட பல விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் நடித்துவருகின்றனர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும்'' என்றும் கூறியிருந்தார்கள்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ``தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகள் எடுத்ததுபோல ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது'' என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

``ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வது குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்'' என்ற நீதிபதிகள் ``பிரபல நபர்கள் பொதுமக்களின் நலனைக் கருதாமல் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர், எனவே, விராட் கோலி, கங்குலி, பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்'' என்றவர்கள், வழக்கை நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு