Published:Updated:

`சட்டம் - ஒழுங்கு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவருகின்றனர்’ - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை!

அதிகளவிலான சட்டவிரோத பேனர்களை ஆளும் கட்சியினர்தான் வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

சட்டவிரோத பேனர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதாக தமிழக தலைமைச் செயலாளர் மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, `அ.தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வரை வரவேற்க பேனர் வைத்த விவகாரம்’ குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

பேனர்கள்
பேனர்கள்

அப்போது, தலைமைச் செயலாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருமண விழாவுக்கு 100 பேனர் வைக்க அ.தி.மு.க நிர்வாகி ராஜா என்பவர் விண்ணப்பித்ததாகவும், அதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல அரசுத் தரப்பில், கோயம்பேடு முதல் வானகரம் வரை வைக்கப்பட்டிருந்த 70 பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சட்டத்துக்கு உட்பட்ட விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், ``சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. இந்த பேனர்கள் வைக்கும்போது அதிகாரிகள் எங்கே சென்றனர். சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர். சட்டம் - ஒழுங்கு மீதும், நீதி பரிபாலன முறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக வேதனை தெரிவித்தனர். சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுப்பதாக தலைமைச் செயலாளர் கூறும் நிலையில், ஆளும்கட்சியினரே அதிக பேனர்கள் வைப்பதாக நீதிபதிகள் சாடினர்.

டிராபிக் ராமசாமி
டிராபிக் ராமசாமி

சட்டவிரோத பேனர்கள் வைக்கக் கூடாது என தங்களது கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கும்படி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதிகாரிகளிடம் முறையாக தகவல் பெற்று மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப் 13 -ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.