Published:Updated:

கோயிலுக்குள் நுழைய மாற்று மதத்தினருக்குத் தடையில்லை - வழக்கும் உயர் நீதிமன்ற அதிரடி கருத்துகளும்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

``நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்ளலாம். அது ஜனநாயகத்திற்கு சரியாக இருக்குமா என்பதை மக்கள் கையிலேயே விட்டுவிடுவோம்” - முஹம்மது அதவுல்லா, பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர்.

கோயிலுக்குள் நுழைய மாற்று மதத்தினருக்குத் தடையில்லை - வழக்கும் உயர் நீதிமன்ற அதிரடி கருத்துகளும்

``நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்ளலாம். அது ஜனநாயகத்திற்கு சரியாக இருக்குமா என்பதை மக்கள் கையிலேயே விட்டுவிடுவோம்” - முஹம்மது அதவுல்லா, பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர்.

Published:Updated:
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 1-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. வேளிமலை குமாரசுவாமி கோயில் தேரோட்டத்தை வடம்பிடித்துத் தொடங்கிவைக்க குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர். அப்போது கடவுள் நம்பிக்கை இல்லாத, மாற்று மதச் சிந்தனைகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் வடம்பிடித்து இழுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கோயில் விழாவில் அமைச்சர்கள்
கோயில் விழாவில் அமைச்சர்கள்

இந்த நிலையில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா இன்று (ஜூலை 6) நடைபெற்றது. அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து குமரி மாவட்டம் பிரம்மபுரத்தைச் சேர்ந்த சோமன் என்பவர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரான அமைச்சர் மனோ தங்கராஜ் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேகர்பாபு
சேகர்பாபு

அவர் அளித்த மனுவில், ``அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவட்டாறில் அமைந்துள்ள இந்தக் கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழாவிற்காகப் பக்தர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளத் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தாந்திரிக விதிப்படி குடமுழுக்கு விழாவின் போது, கலந்துகொள்ளும் ஆண்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டு பங்கேற்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே, கலச பூஜைகள் செய்ய வேண்டும். இந்த விழா அரசு விழாவாக நடத்தப்படும்போது இதுபோன்ற சம்பிரதாயங்கள் முறையாக கடைப்பிடிக்கப்படாமல் புனிதம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழாவின்போது இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கை நேற்று முந்தினம் (4.07.2022) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு விசாரித்த போது, ``குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் கூறப்படவில்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில், நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, அவர்களை நிறுத்தி, அவர்களுடைய மதத்தினை உறுதிசெய்வது பெரும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்” என்றவர்கள், அழைப்பிதழில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிட்டு, ``பாடகர் யேசுதாஸ் வேறு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் ஏராளமான இந்துக் கடவுள்களின் பாடல்களைப் பாடியுள்ளார். அவை கோயில்களிலும் ஒலிக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். ஆகவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. இந்த விஷயங்களைப் பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும்” என்று வழக்கைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை நீதிமன்றம் கேள்வி!
மதுரை நீதிமன்றம் கேள்வி!

இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் நேற்று இரவு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், ``எந்த மதத்தினரும் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்று மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்குச் செருப்படி! மதுரை நீதிமன்றத்தின் கருத்து தான் பொதுமக்கள் அனைவருடைய கருத்து. பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது” எனப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் முஹமது அதவுல்லா, ``நீதிமன்ற தீர்ப்பை ஜனநாயக ரீதியாக வரவேற்கிறோம். ஆனால், இந்தியக் குடிமகனாகப் பார்க்கும் போது பழமையான ஒவ்வொரு கோயிலுக்கும் ஆகமவிதிகள் படி கலாசாரம், தனித்துவம் இருக்கிறது. அதை ஒவ்வொருவர் நம்பிக்கை சார்ந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த நம்பிக்கையை யாரும் கேள்விக்குறியாக்கக் கூடாது. அது அரசாக இருந்தாலும் சரி, நீதிமன்றமாக இருந்தாலும் சரி. சட்டம், வழிபாட்டு உரிமை கொடுத்திருக்கிறது. அதில் தலையிடக் கூடாது. அதுதான் மதசுதந்திரம்.

முஹமது அதவுல்லா
முஹமது அதவுல்லா

எல்லோரும் வரலாம் என்றால், ஒரு கோயிலுக்கு வரும் வேறு மதத்தினர் அந்த கோயிலின் பாரம்பரியத்தைப் பின்பற்றுவார்களா என்ற ஒன்று இருக்கிறதல்லவா. அதை அனுமதிப்பது என்பது அந்த நம்பிக்கையை அவமதிப்பது போல் தான். சிலருக்கு ஒரு கோயில், அதிலுள்ள சிலைகள் மீது ஈடுபாடு இருக்குமே தவிர அதன் டிவைன், ஸ்பிருச்சுவலாக பார்ப்பார்களா? எனவே ஒரு மத பாரம்பரியத்தில், சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. அதில் கருத்துரிமை என்கிற பெயரில் அசிங்கப்படுத்தக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாம். அது ஜனநாயகத்திற்கு சரியாக இருக்குமா என்பதை மக்கள் கையிலேயே விட்டுவிடுவோம்” என்கிறார்.