Published:Updated:

பிரசாந்த் பூஷணுக்கும் நீதிபதிக்கும் இடையில் சிக்கியிருக்கும் அந்த `மன்னிப்பு'... ஏன், எதற்காக?!

கார்த்தி
Prasanth Bhushan
Prasanth Bhushan

''இதைச் செய்யாதே என பிரசாந்த் பூஷணுக்கு இந்த நீதிமன்றம் கட்டளையிடுகிறது என்றால், எதைச் செய்யாதே என்பதுதான் கேள்வியாக இருக்கும். அது இந்த நீதித்துறையை விமர்சிப்பதெனில், இனியும் அச்செயலை பிரசாந்த் பூஷண் செய்வாரே!''

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, மன்னிப்பு... இரண்டு மனிதர்களுக்கும், மன்னிப்பு என்கிற வார்த்தைக்கும் இடையிலான விவாதத்தைத்தான் இந்தியாவே பார்த்துக்கொண்டிருக்கிறது.

''மன்னிப்பு கேட்டால் காந்தியைப் போல உயர்வீர்கள். மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு?'' என்கிற மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் கருத்து அறிவுசார் சமூகத்தில் பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பிவருகிறது.

என்னதான் பிரச்னை?!

 பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட், முகக்கவசம் அணியாமல் அமர்ந்திருந்தது குறித்து விமர்சித்து ட்வீட் செய்ததற்காகவும் உச்சநீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்த தொடர் விமர்சனங்களுக்காகவும் பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவுசெய்தது. மேலும், ‘அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகும் அந்தப் பதிவுகளை ஏன் நீக்கவில்லை’ என்று ட்விட்டர் இந்தியா நிர்வாகத்தையும் நீதிபதிகள் கண்டித்தார்கள். மேலும், 2009-ம் ஆண்டு ‘தெஹல்கா’ இதழுக்கு அளித்தப் பேட்டியில் நீதித்துறையை விமர்சித்திருக்கிறார் என பிரசாந்த் பூஷண் மீது பத்தாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கும் தூசுதட்டி எடுக்கப்பட்டது.

பிரசாந்த் பூஷன் வழக்கில் நடப்பது என்ன?!

இந்த சர்ச்சை ட்விட்டுகளுக்கான வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பளித்த மூவர் அமர்வு, ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது. 20-ம் தேதி மீண்டும் 'மன்னிப்பு கேட்கவேண்டும்' என பிரசாந்த் பூஷணுக்கு மேலும் இரு நாள்கள் அவகாசம் கொடுத்தது நீதிமன்றம். ஆனால், பிரசாந்த் பூஷண் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆகஸ்ட் 24-ம் தேதி மன்னிப்பு கேட்க மறுத்ததுடன், ஒரு துணைப் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷண் சார்பாக வாதிடும் வழக்கறிஞர் தவான்.

அதில், இன்னும் தெளிவாக தன் நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார் பூஷண். 'மன்னிப்பு கேட்க மாட்டேன்' என சொன்னதன் நீட்சிதான் என்றாலும், அது வெறுமனே மறுப்புக் கடிதமாக மட்டும் இருக்கவில்லை. மாறாக இந்த நீதித்துறையின் மீது பிரசாந்த் பூஷண் வைத்திருக்கும் மாண்பையும், மரியாதையையும் அது பறைசாற்றியது. துணை பிரமான பத்திரத்தின் சாராம்சம் இதுதான்.

பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷணின் கருத்துகள் உண்மை நிகழ்வுகளை மையப்படுத்தி சொல்லப்பட்டவை.
இதற்கு முன்பும் பலர் இத்தகைய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
நீதிபதி லோகுர், குரியன் ஜோசப், AP ஷா, வழக்கறிஞர் அருண் ஷோரி போன்றவர்கள் இத்தகைய விமர்சனங்களை பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறார்கள்.
மன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிலையை பிரசாந்த் பூஷணுக்கு உருவாக்குவது என்பது அறமல்ல.

நேற்று (25.08.2020) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வர, பிரசாந்த் பூஷண் சார்பாக தவான் வாதாடினார். 2009-ம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை செப்டம்பர் 10-ம் தேதி வேறு அமர்வுக்கு மாற்றிவிட்டு (நீதிபதி மிஸ்ரா இந்த வாரத்துடன் ஓய்வு பெறுகிறார்) இந்த வழக்கின் வாதங்கள் மீண்டும் தொடங்கின.

''கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிய விமர்சனங்களுக்கு நீங்கள் அவருக்கு எதுவும் தண்டனை அளிக்கவில்லையே'' என அருண் மிஸ்ராவிடம் கேள்வி எழுப்பினார் தவான். “இதைச் செய்யாதே என பிரசாந்த் பூஷணுக்கு இந்த நீதிமன்றம் கட்டளையிடுகிறது என்றால், எதைச் செய்யாதே என்பதுதான் கேள்வியாக இருக்கும். அது இந்த நீதித்துறையை விமர்சிப்பதெனில், இனியும் அச்செயலை பிரசாந்த் பூஷண் செய்வாரே” என்பதாக தன் வாதத்தை முன் வைத்தார்.

காந்தி
காந்தி

இந்த வழக்கில் உச்சரிக்கப்பட்ட இன்னொரு பெயர் காந்தி. ''காந்தியைப் போல் நானும் மன்னிப்பு கேட்க மாட்டேன்'' என்றார் பூஷண். “மன்னிப்பு எனும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அப்படி என்ன தவறு நிகழ்ந்துவிடப்போகிறது. அது பல காயங்களை ஆற்றும். நீங்கள் மன்னிப்பு கேட்டால், மகாத்மா காந்தியின் நிலைக்குச் செல்லலாம். காந்தி மன்னிப்பு கேட்பார். நீங்கள் யாரையேனும் காயப்படுத்திவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும். அதில் யாதொரு சிறுமையுமில்லை“ என்றார் நீதிபதி மிஸ்ரா.

சரி, காந்தி நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறாரா என்றால் இல்லை. காந்தி 1919-ல் 'Young India' எனும் வாரப் பத்திரிகை நடத்திவந்தபோது அதில் இடம்பெற்ற ஒரு கருத்துக்காக, உயர்நீதிமன்ற நீதிபதி காந்தியை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். அடுத்த இதழில் மன்னிப்புக்கோரல் வெளியாக வேண்டும் என்றும் சொல்கிறார்.

“என்னுடைய விளக்கம் உங்களுக்கு போதுமானதாக இல்லையென்றால், நீங்கள் எனக்குத் தரும் தண்டனையை மனதார ஏற்றுக்கொள்கிறேன்“ என பதில் அனுப்பினார் காந்தி. எக்காரணம் கொண்டும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அக்கால நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் அது மாபெரும் குற்றமே. ஆனால், காந்தி கடுமையாக எச்சரிக்கப்பட்டாரே தவிர, எந்தவிதமான தண்டனையும் அவருக்கு வழங்கப்படவில்லை. பிரசாந்த் பூஷண் வழக்கிலும் பலர் எதிர்பார்ப்பது இதைத்தான்.

Gandhi Judgement
Gandhi Judgement

இந்த வழக்கு விசாரணையின்போது, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட மற்றுமொரு வழக்கு எனில், அது முன்னாள் நீதிபதி கர்ணன் மீதான அவமதிப்பு வழக்கு. 2017-ம் ஆண்டு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் கர்ணன். பிரதமர் அவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதியரசர் JS கேஹர் அமர்வுக்கு பரிந்துரைத்தார்.

அதன்பின் ஏற்பட்ட முரண்பாடான கருத்துகளில், கேஹருக்கு எஸ்சி/எஸ்டி சட்டத்தின் படி ஆயுள் தண்டனை விதித்தார் கர்ணன். அதனை எதிர்த்து அடுத்த நாளே, கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அப்போது அந்தத் தீர்ப்பை வரவேற்றவர்களில் பிரசாந்த் பூஷணும் ஒருவர். நீதிபதி கர்ணன் ஆறு மாத தண்டனைக் காலத்தை அனுபவித்தாலும், அவரின் புகார்கள் காற்றில் பறக்கவிடப்பட்டது. இப்போது பிரசாந்த் பூஷணுக்கு சமூக வலைதளங்களில் கிடைக்கும் ஆதரவுகூட அப்போது கர்ணனுக்கு இல்லை.

இந்த விஷயத்தில் பிரசாந்த் பூஷண் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்பதே அறிவுசார் சமூகத்தின் கருத்தாக இருக்கிறது. ''நீதியைவிடவும் மேலானோர் யாருமில்லை. நான் பிரசாந்த் பூஷணின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்" என்கிறார் கர்ணன்.

நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறார்கள். இத்தகைய விமர்சனங்கள்தான் நீதிமன்றங்களை வலுவாக்கும். உச்சநீதிமன்றம்தான் எல்லாவற்றுக்கும் மேன்மையானதே தவிர, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்ல என்பதை பிரசாந்த் பூஷணின் வழக்கு மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

உண்மையில், அடுத்த வாரத்துக்குள் ஓய்வு பெறவிருக்கும் நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு இது கொஞ்சம் போதாத காலம்தான். இரண்டாம் வழக்கை செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது போல், இதை ஒத்திவைக்கவும் முடியாது. இந்தியாவே உற்று நோக்கும் இவ்வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, நீதிமன்றம் தானாகவே தொடந்த வழக்கை தள்ளுபடி செய்தால், என்ன நடக்கும் என அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலிடமும், தவானிடமும் கருத்துகளை கேட்கிறார். அதேசமயம், பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை விதித்தால், இன்னும் அதிகமாக விமர்சிக்கப்படுவார். தவான் சொல்வது போல், இது பிரசாந்த் பூஷணுக்கு ஒருவகையில் வெற்றிதான்.

நீதிமன்ற அவமதிப்புக்கும், கருத்து சுதந்திரத்துக்குமான மெல்லிய கோட்டை பூஷண் தாண்டிவிட்டார் என்பதுதான் இங்கிருக்கும் பிரச்னை. கோட்டை மொத்தமாய் அழித்து, கருத்து சுதந்திரத்துக்கு செவி மடுங்கள் என்பதே பிரசாந்த் பூஷண்களின் வாதமாக இருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு